மிலன்: இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வது சீசன் நடக்கிறது. இதன் துவக்க விழாவில், 12 ஆண்டுகளுக்கு பின் ரஷ்ய நட்சத்திரங்கள் தங்கள் நாட்டு கொடியுடன் பங்கேற்றனர். ஊக்க மருந்து சோதனையில் சிக்கியது, உக்ரைன் மீதான போர் உள்ளிட்ட காரணங்களுக்காக ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய தொடர்களில் ரஷ்ய நட்சத்திரங்கள் தங்கள் நாட்டு கொடியுடன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை நீங்கியதால், மைதானத்தில் மீண்டும் ரஷ்ய கொடி ஏற்றப்பட்டது. ஒருவேளை ரஷ்ய நட்சத்திரங்கள் தங்கம் வென்றால், பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உக்ரைன் நட்சத்திரங்கள் துவக்க விழாவை புறக்கணித்தனர்.
ரியல் மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் செல்டா விகோ, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 27 போட்டியில், 20 வெற்றி, 3 ‘டிரா’, 4 தோல்வி என, 63 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் பார்சிலோனா அணி (64 புள்ளி) தொடர்கிறது.
மூன்றாவது சுற்றில் சபலென்கா
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் ஹிமெனோ சகாட்சுமி மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
எக்ஸ்டிராஸ்
* ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-11 என, ஜப்பானிடம் தோல்வியடைந்தது. ஏற்கனவே வியட்நாமிடம் வீழ்ந்த இந்தியா, தனது கடைசி லீக் போட்டியில் (மார்ச் 10) சீனதைபே அணியை சந்திக்கிறது.
* ஐதராபாத்தில், பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதிச் சுற்று இன்று துவங்குகிறது. இந்திய அணி, ‘பி’ பிரிவில் உருகுவே (மார்ச் 8), ஸ்காட்லாந்து (மார்ச் 9), வேல்ஸ் (மார்ச் 11) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
