புதுடில்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஒடிஷா, உத்தர பிரதேசம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், பெண்களை குறிவைத்து உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஒடிஷா
ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு, ‘சுபத்ரா யோஜனா’ என்ற திட்டத்தில், 21 – 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, ஆண்டுதோறும், 10,000 ரூபாய் நிதியுதவி அளித்து வருகிறது. இது, இரு தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், புரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘சுபத்ரா யோஜனா’ திட்டத்தில், 1.02 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில், தலா, 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மோகன் சரண் மஜி, ”இந்த பணம் சிறு வணிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு உதவும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மாநில பொருளாதாரம் மேம்படும்,” என்றார்.
![]() |
உத்தர பிரதேசம்
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லக்னோவில் நேற்று நடந்த விழாவில், ‘வேலைவாய்ப்பு சங்கமம்’ என்ற மொபைல்போன் செயலியை அவர் துவக்கி வைத்தார். பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை சுயசார்பு உடையவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். லக்னோவில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதன் மூலம், 5,000-கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
அசாம்
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தமிழகத்துடன் சேர்த்து விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், ‘அருணோடோய்’ திட்டத்தில், 40 லட்சம் பெண்களுக்கு நாளை மறுநாள் தலா, 9,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தில், தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம், 1,250 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சட்டசபை தேர்தலை கருதி, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜன., – பிப்., – மார்ச் – ஏப்., என நான்கு மாதங்களுக்கு சேர்த்து, அத்துடன் அசாமிய புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிதி என, மொத்தம், 9,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
![]() |
பஞ்சாப்
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாநிலத்திலுள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., பெண்களுக்கு மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, 2026- – 27ம் நிதியாண்டில், 9,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் புத்திசாலிகள்!
பெரும்பாலான விஷயங்களில் ஆண்களை விட பெண்களே புத்திசாலிகள். ஆண்கள் எப்போதும் அவசரப்படுபவர்கள். ஆனால், பெண்கள் நீண்ட கால நோக்கில் சிந்திப்பவர்கள். அவர்கள் நேரடியாக அதிகாரத்தை செலுத்த மாட்டார்கள்; மறைமுகமாக பயன்படுத்துவர். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என் குடும்பத்தில் என் பாட்டி இந்திரா தான், ‘பாஸ்’. என் குடும்பத்தில் தற்போது கூட, ஆண்களை விட பெண்களின் ஆதிக்கமே உள்ளது.
– ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,
![]() |
உத்வேகம் அளிக்கின்றன!
அனைத்து துறைகளிலும் உறுதிப்பாடு, படைப்பாற்றல், ஆர்வத்துடன் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பங்காற்றுகின்றனர். அவர்களின் சாதனைகள் நம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கின்றன. அவர்களின் சாதனைகள், ‘வளர்ந்த இந்தியா’வை கட்டியெழுப்புவதற்கான நம் கூட்டு உறுதியை வலுப்படுத்துகின்றன. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே என் அரசின் நோக்கம்.
– நரேந்திர மோடி, பிரதமர்



