புதுடில்லி: மேற்கு வங்கத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு விதிமீறல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தமிழகத்துடன் சேர்த்து விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் வந்தார்.
அவரை, சிலிகுரி மேயர் கவுதம் தேப் மட்டுமே நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து, கோஷாய்பூர் என்ற இடத்தில் நடந்த பழங்குடியினர் சமூகத்தின் ஆண்டு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
முதலில் இந்த நிகழ்ச்சி, பிதான்நகரில் நடப்பதாக இருந்தது. பின், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து அதிருப்தி தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘பிதான்நகரில் நிகழ்ச்சி நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்க முடியும். மேற்கு வங்க அரசு ஏன் அங்கு அனுமதி அளிக்கவில்லை என தெரியவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு தங்கை போன்றவர். அவர் என் மீது கோபமாக இருக்கிறாரா என தெரியவில்லை’ என்றார்.
இது, தேசிய அளவில் பேசுபொருளானது. ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கு வங்க அரசு அவமதித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ஜனாதிபதி முர்மு பங்கேற்றது அரசு விழா அல்ல; அது தனியார் நிகழ்ச்சி. அதற்கு மாநில அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்கியது. சட்டசபை தேர்தல் நேரத்தில் பா.ஜ., துாண்டுதலின்படி, ஜனாதிபதி முர்மு அரசியல் செய்கிறார்’ என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மேற்கு வங்க தலைமைச் செயலர் நந்தினி சக்ரவர்த்திக்கு, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் எழுதியுள்ள கடிதம்: ‘புளூ புக்’-கில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மீறப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்
மாநிலத்திற்கு ஜனாதிபதி வந்த போது, முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி., ஆகியோர் ஏன் நேரில் வரவில்லை? இது, ‘புளூ புக்’ விதிகளின்படி கடுமையான விதிமீறல்
சிலிகுரி மேயர் கவுதம் தேப் மட்டுமே ஜனாதிபதியை வரவேற்க சென்றது மரபு மீறல்
ஜனாதிபதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிப்பறையில் தண்ணீர் இல்லாதது ஏன்
ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் சென்ற பாதையில் குப்பை சிதறிக் கிடந்தது ஏன்
இந்த ஏற்பாடுகளுக்கு பொறுப்பான டார்ஜிலிங் மாவட்ட கலெக்டர், சிலிகுரி போலீஸ் கமிஷனர், கூடுதல் மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்து, மேற்கு வங்க தலைமை செயலர் நந்தினி சக்ரவர்த்தி விரைவில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரட்டி அடிப்பர்!
மேற்கு வங்கத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அம்மாநில அரசால் இழைக்கப்பட்ட அவமதிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. இது ஒட்டுமொத்த தேசத்தையே காயப்படுத்தி உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை மேற்கு வங்க மக்கள் விரைவில் விரட்டி அடிப்பர்.
– நரேந்திர மோடி, பிரதமர்
