விஜய் தந்த வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்: ”புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். அதையெல்லாம் நம்ப வேண்டாம்” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி சார்பில் நத்தம் ரோடு கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

பழனிசாமி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். தற்போது பாதுகாப்பு இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நாள்தோறும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை என வாக்குறுதி அளித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார். அதையும் அனைத்து மகளிருக்கும் வழங்க வில்லை.

தற்போது கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகளை வெளியிடுகிறார். அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம்.

நம் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பீஹாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.

வேட்டி, சேலை சரியில்லை சீனிவாசன் பேசிக்கொண்டிருக்கும் போது மகளிரணி நிர்வாகிகள் சிலர் ‘அண்ணா ஹாட் பாக்ஸ் வரவில்லை. வேட்டி சேலை சரியாக இல்லை’ என புகார் தெரிவித்தனர்.

ஒரு நிர்வாகி ‘அதை திரும்பி வழங்கி மீண்டும் தரமான வேட்டி சேலையை வாங்கிச் செல்கின்றனர்’ என்றார்.

உடனே சுதாரித்த சீனிவாசன் ‘அனைவருக்கும் தரமான வேட்டி, சேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

Source link