ஜெருசலேம்: ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பை லெபனான் கட்டப்படுத்த தவறினால், பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.
எச்சரிக்கை
இதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானுக்கு ஆதரவாக, மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நாட்டைவிட்டு வெளியேறினர்.
ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக கருதப்படும் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய கட்டடங்கள் சேதமடைந்தன. நபி சிட் நகரில் வீசப்பட்ட குண்டுகளால், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், ஹெஸ்பொல்லா அமைப்பை கட்டுப்படுத்தாவிட்டால் லெபனான் பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இது குறித்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதாவது: ஈரானுக்கு ஆதரவாக எங்கள் நாட்டின் மீது ஹெஸ்பொல்லா அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பை நிராயுதபாணியாக்குவதற்கான 2024 ஒப்பந்தத்தை அமல்படுத்துவது லெபனான் அரசின் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாவிட்டால் ஹெஸ்பொல்லா ஆக்கிரமித்துள்ள லெபனான் பே ரழிவுகளை சந்திக்க நேரிடும்.
வெளியேறினர்
உங்கள் தலைவிதி உங்கள் கைகளில் உள்ளது. எங்கள் சமூகங்களையும் குடிமக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் . இவ்வாறு அவர் கூறினார்.
லெபனானில் இருக்கும் ஈரானிய பிரதிநிதிகள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஈரான் துாதர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட 150க்கும் மேற்பட்டோர் லெபனானை விட்டு வெளியேறினர்.
