கோஷ்டி சண்டை என்பது அனைத்து கட்சிகளிலும் உண்டு. இதில் முதலிடம் வகிப்பது காங்கிரஸ்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்., கட்சியில் பல கோஷ்டிகள் உண்டு.
இது தொடர்பாக டில்லியில் ஒரு பேச்சு உண்டு. ஒரு மாநிலத்தில் ஒருவர் தலைவராக இருந்தால் அவர் பெரிய ஆளாக வளர்ந்துவிடுவார்.
எனவே இன்னொருவரை இந்த தலைவருக்கு எதிராக நிறுத்த வேண்டும் என ஒரு கோஷ்டியை வளர்த்துவிடுவாராம் காங்., தேசிய தலைவர். இது தான் காலம் காலமாக இருக்கும் நடைமுறை.
தமிழக கட்சி ஒன்றுக்குள் காங்கிரஸ் அளவிற்கு கோஷ்டி இல்லை என்றாலும், ஒரு தலைவரை மாட்டி விட மற்றவர்கள் காத்திருந்தனர் என்பது உண்மை. இப்படி எனக்கு நேர்ந்த அனுபவத்தை சொல்கிறேன்.
தொண்டர்களின் பலம்
அவர் அந்த கட்சியில் பிரபலமானவர். தலைவருக்கு நெருக்கமாக இருந்தவர். அவர் இருந்தவரை எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைவருக்கு பக்கத்தில் இவர்தான் நிற்பார். பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரிடம் ஒரு நல்ல பழக்கம். தொண்டர்கள் யார் இவரைத் தேடி வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வார்.
ஒரு பிரச்னையில் சிக்கி அதிலிருந்து இவர் வெளியே வந்த போது, இவரை வரவேற்க கூடிய தொண்டர்கள் கூட்டத்தைப் பார்த்து மற்ற தலைவர்கள் அதிர்ந்து போனார்கள். அந்த அளவிற்கு தொண்டர்கள் மத்தியில் பிரபலம்.
சில சமயங்களில் வாய்தான் இவருக்கு பிரச்னை. பொதுக்கூட்டங்களில் ஆவலால் எதையாவது உளறிவிடுவார். அது பெரும் கண்டனத்தை உண்டாக்குவதோடு சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவிடும். இது கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தினாலும் பெரும் சேதம் இதுவரை ஏற்பட்டதில்லை.
இரு துருவங்கள்
இந்த அரசியல்வாதிக்கு எதிராக செயல்பட்டார் ஒருவர். அவரும் கட்சியில் பலம் வாய்ந்தவர். குடும்பத்திலும் அதிகாரம் செலுத்துபவராக இருந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் பாசமழை பொழிவார்கள். ஆனால் இரண்டாமவருக்கு தொண்டர்கள் பலம் கிடையாது. இன்னும் கேட்டால் தொண்டர்கள் இவர் வீட்டிற்கு வருவார்களா என்பதே சந்தேகம். காரணம் இவருடைய வாழ்க்கை ஸ்டைல் அப்படி.
சிறு வயதிலிருந்தே மேல்தட்டு வாழ்க்கை. பதவி இவரைத் தேடி வந்தது. ஆனால் முதலாமவரோ ஒரு குக்கிராமத்திலிருந்து படித்து வந்து முட்டி மோதி கட்சியில் பதவியை வாங்கியவர். கட்சி தலைவர் தலைநகருக்கு வந்தால் இரண்டாமவர் வீட்டில்தான் தங்குவார். கட்சியின் சீனியர்கள் தலைவரைப் பார்க்க வேண்டுமானால் இவருடைய வீட்டிற்குத்தான் வர வேண்டும். உடனே தலைவரை சந்திக்க முடியாது; காத்திருக்க வேண்டும்.
ஒரு முறை ஒரு சீனியர் தலைவர் என்னிடம் சொன்னார். “நாங்களெல்லாம் கட்சியில் பல வருடங்களாக கட்சியில் இருக்கிறோம். ஆனால் தலைவரைப் பார்க்க இவருடைய பர்மிஷன் தேவைப்படுகிறது,” என்றார், விரக்தியுடன்.
எதிரும் புதிரும்
முதலாவது நபர் ஒரு பிரச்னையில் சிக்கினார். அப்போது கட்சி அவருக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும் இரண்டாவது நபர் இவருக்கு எதிராக செய்திகளை பரப்பினார். காரணம், முதலாவது நபரின் பதவி தனக்கு வேண்டும் என்பதால். ஓரிரு முறை என்னிடமும் முதல் நபருக்கு எதிராக செய்தி போட சொன்னார். ஆனால் நான் அதைச் செய்யவில்லை.
முதல் நபரை ஒரு முறை நான் சந்தித்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “உங்க இரண்டு பேரின் (என்னையும் என் நண்பரான சீனியர் பத்திரிகையாளரையும்) ஜாதிகளைக் குறிப்பிட்டு தாத்தாவிடம் புகார் சொல்லியுள்ளாராம்… உங்கள் இரண்டு பேரால்தான் கட்சிக்கு பெரும் பிரச்னை என தலைவரிடம் சொல்லிவிட்டார்… உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்னை…,” என்றார், அவர்.
நான் நடந்ததை சொல்லவில்லை.
“எங்க இரண்டு பேரால கட்சிக்கு பிரச்னையா? அவ்வளவு மோசமாகவா கட்சி இருக்கிறது,” என்று திருப்பிக் கேட்டேன். பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.
இனி இன்னொருவரைப் பற்றி….
நான் அப்படியா?
அந்த தமிழக கட்சியில் பவர்புல் ஆனவர் அவர். அடிதடிக்கு பெயர் போனவர் என இவரைப் பற்றி சொல்வார்கள். ஜெயலலிதா ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது என்.டி.டி.வி., தேர்தல் கவரேஜுக்காக அங்கு சென்றிருந்தேன். அப்போது மேலே சொன்ன நபரிடம் பேட்டி எடுத்தேன். அப்போது அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பிறகு அவர் டில்லியில் ஒரு பெரிய பதவியில் இருந்தபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் இன்னொரு சீனியர் பத்திரிகையாளரும் அவருடைய வீட்டிற்கு சென்றோம்.
ஹாலில் அவர் அமர்ந்திருக்க, பக்கத்தில் நடிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் அப்போது எம்பி. இன்னொரு பக்கம் வேறொரு எம்பி. இப்போது அவர் கட்சி மாறிவிட்டார். நடிகரோ, இப்போது நடிப்பதை விட்டுவிட்டார்.
என் நண்பர் அந்த அரசியல்வாதியிடம், ”எல்லாம் உங்களை ரவுடின்னு சொல்றாங்களே,” என திடீரென கேட்டுவிட்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு எம்பிக்களும், ‘இப்படியா கேட்பது’ என்கிற மாதிரி எங்களைப் பார்த்தனர். எந்தவித கோபமோ ஆத்திரமோ இல்லாமல் எங்களை அமைதியாக பார்த்தார். ஒரு 10 வினாடிகள் ஹாலில் அமைதி நிலவியது. “என்னைப் பார்த்தால் அப்படியா இருக்கிறது” என சொல்லி சிரித்தார். உடனே மற்ற எம்பிக்களும் சிரிப்பில் சேர்ந்து கொண்டனர். நெடு நேரம் அவரிடம் பேசிவிட்டு வந்தோம்.
செய்தி போடுங்கள்
பிறகு அடிக்கடி அவரிடம் போனில் பேசுவேன். அவரும் சகஜமாக பேசுவார். பதவி முடிந்தவுடன் ஊருக்கு போய்விட்டாலும் தொடர்பில் இருந்தார். திடீரெனெ ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. “வாட்ஸ் அப்பைப் பாருங்கள், ஒரு ஆவணத்தை அனுப்பியுள்ளேன். இதை செய்தியாக போடுங்கள்,” என்றார்.
அந்த ஆவணம் அமலாக்கத்துறை அறிக்கையின் ஒரு பக்கம். முழுவதுமாக அமலாக்கத்துறை அறிக்கையை அனுப்பாமல் ஒரு பக்கத்தை மட்டும் அனுப்பியிருந்தார்.
அதில் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த குடும்ப நபருக்கு எதிராக எங்கள் டிவியில் செய்தி வர வேண்டும் என்பது எனக்கு வாட்ஸ் அப் அனுப்பியவரின் விருப்பம்.
எங்கள் டிவியில் அமலாக்கத்துறை செய்திகளை சேகரிக்கும் நிருபரிடம் அந்த ஒரு பக்கத்தை அனுப்பினேன். ‘அந்த குடும்ப நபரின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப் போகிறதா’ என அதிகாரிகளிடம் விசாரித்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து அந்த நிருபரிடமிருந்து எனக்கு போன். “சார் இது உண்மையல்ல என அதிகாரிகள் சொல்கின்றனர். எனவே இதை நாம் ப்ளாஷ் நியூஸாக போட முடியாது” என்றார்.
இதை நான் அந்த அரசியல்வாதியிடம் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து போன். ‘ஏன் செய்தி போடவில்லை’ என்றார்.
“நீங்கள் அனுப்பிய ஆவணத்தை செக் செய்தோம். அது சரியல்ல என்று நிருபர் சொல்லிவிட்டார்… அதனால் செய்தி போட முடியாது,” என பதில் சொன்னேன். “ஆனால் தமிழ் சேனலில் போடுகிறார்களே” என்றார். அவர் குறிப்பிட்ட தமிழ் சேனல் ஒரு கட்சி சார்பான செய்தி சேனல்.
“அவர்கள் போடலாம். ஆனால் எங்கள் சேனலுக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நீங்கள் அனுப்பிய ஆவணம் உண்மையல்ல என அதிகாரிகள் சொல்லும் போது எப்படி நான் செய்தி போட முடியும்,” என பதில் அளித்தேன். அதன் பிறகு அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
அரசியலுக்கு வர ஆசையே இல்லை
இப்போது இன்னொருவரைப் பற்றி…
இவரை வேண்டா வெறுப்பாக அரசியலில் நுழைத்தார்கள். இவருக்கோ அரசியலில் துளி கூட விருப்பம் இல்லை. எனக்கு நல்ல நண்பர். மனம் விட்டு பேசுவார். “நான் என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கோ அரசியலில் வர இஷ்டமே இல்லை. குடும்பத்தின் நெருக்கடி. என்ன செய்வது,” என வருத்தப்பட்டு என்னிடம் சொன்னார்.
அரசியலுக்கு வந்ததால் ஒரு பெரும் பிரச்னையில் சிக்கினார். ஒரு வழியாக அதிலிருந்து தப்பித்து வந்தார். ஒரு நடிகை இவருடைய கட்சியில் இணைந்தார். அந்த இணைப்பு விழாவில் மேலே சொன்ன அரசியல்வாதி கலந்துகொள்ளவில்லை. இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவரிடமே இதை கேட்டுவிட்டேன்.
“போயும் போயும் இந்த பெண்மணியைப்போய் கட்சியில் சேர்த்துக்கொள்கிறார்கள். என்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது கேட்டிருக்கலாம். இந்த கோபத்தில்தான் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை,” என்றார்.
தமிழக அரசியலில் இப்போது பிஸியாகிவிட்டார். இவருக்கு எதிராக கட்சியில் ஒரு கோஷ்டி வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆனாலும், குறிப்பிட்ட ஒரு ஜாதியின் ஆதரவு இருப்பதால், அவரது அரசியல் என்னவோ சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது!
கேள்வி 1: யார் அந்த இரு துருவங்கள்; கண்டுபிடித்து கமென்ட் செய்து சொல்லுங்க, வாசகர்களே!
கேள்வி 2: என்னைப் பார்த்தால் ரவுடி போலவா இருக்கிறது என்று கேட்ட அந்த அரசியல்வாதி யாராக இருக்கும்? கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
கேள்வி 3: வேண்டா வெறுப்பாக அரசியலுக்கு வந்த அந்த பிரபல அரசியல்வாதி யார்? கமென்ட் செய்து சொல்லுங்க வாசகர்களே!
– அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
இந்த தொடரின் அடுத்த கட்டுரை, மார்ச் 12 வியாழன் காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) வெளியாகும்.
