சவுதியில் தொடரும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

ரியாத்: சவுதி அரேபியாவில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், அண்டை நாடுகளில் இருந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தும்பட்சத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவின் அர் கர்ஜ் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஈரான் நேற்று (மார்ச் 9) ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாகவும், வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் 12 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகின.

ஆனால், இந்தத் தகவலை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. நேற்று மாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும், இந்தியர் யாரும் உயிரிழக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளது. மேலும், காயடைந்தவர்கள் அல் கர்ஜ்ஜில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தூதரகம் வழங்கும் பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ரியாத் மற்றும் ஜெட்டாவிலிருந்து இந்தியாவுக்கான விமானச் சேவைகள் தற்போது தடையின்றி இயங்கி வருவதாகவும், இந்தியா திரும்ப விரும்பும் குடிமக்கள் இந்த விமானங்களைப் பயன்படுத்தி தாயகம் திரும்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த டேங்கர் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கேப்டன் அஷிஷ்குமார் உள்பட 3 இந்தியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Source link