`IAS, IPS அதிகாரியின் கையெழுத்துக்கு ஒரு வாழ்வையே மாற்றும் சக்தி இருக்கிறது!' | நீங்களும் ஆகலாம் IAS

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து, ‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பில் UPSC/TNPSC வழிகாட்டல் நிகழ்ச்சி மார்ச் 8 அன்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

சிவில் சர்வீசஸ் தேர்வை நோக்கமாகக் கொண்ட மாணவர்களுக்கு சரியான முறையில் வழிகாட்டும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக டாக்டர் செ.சைலேந்திரபாபு, IPS(Retd.) மற்றும் டாக்டர் V.இராம் பிரசாத் மனோகர், IAS, இருவரும் கலந்துகொண்டு, மாணவர்களிடம் அவர்களது அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

நிகழ்வின் தொடக்கமாக ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியர் வெ.நீலகண்டன் வரவேற்புரை ஆற்றி இந்நிகழ்வை தொகுத்தார். மகளிர் தினம் அன்று நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு துறையில் சாதனை படைத்திருக்கும் எட்டுப் பெண்களுக்கு women of Excellence Award வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற அனைத்துப் பெண்களும் அரங்கில் இருந்த சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாவும் ஊக்கமாகவும் திகழ்ந்தார்கள்.

டாக்டர் V.இராம் பிரசாத் மனோகர் IAS பேசுகையில், கனவு காண்பது, அக்கனவை நனவாக்குவதற்குத் தேவையான முக்கிய காரணங்களை ஆராய்தல் மற்றும் அதை அடையாவிடாமல் தடுக்கும் தடங்கல்கள் போன்றவை குறித்து தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.

“பயம், சுய சந்தேகம், தள்ளிபோடுதல் (procrastination) இவை மூன்றும் நமது கனவை அடையாவிடாடல் தடுக்கும் எதிரிகள். பயமும் சுய சந்தேகமும் சேர்ந்தால் பணிகளை நாம் தள்ளிபோடத் தொடங்கிவிடுவோம், வெற்றிப்பாதையில் இருந்து தவறி விடுவோம்.

நமது கனவை வெளிப்படுத்தும் போது அதை நிறைவேற்ற முடியாது என்று கூற நூறு பேர் இருப்பார்கள், முடியும் என்று சொல்ல நீங்கள் ஒருவர் மட்டும் தான் இருப்பீர்கள். நானும் என் கனவைச் சொல்லும் போது தமிழ்வழி அரசுப்பள்ளி மாணவன், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், எப்படி IAS ஆவான் என்ற சந்தேகம் எல்லாருக்கும் இருந்தது போல எனக்கும் இருந்தது, இதையெல்லாம் தாண்டித்தான் நான் வந்திருக்கிறேன், இதை பற்றி ‘கருவில் இருந்து கலெக்டர் வரை’ என்ற தலைப்பில் புத்தகமும் எழுதியுள்ளேன். எனவே பயத்தையும் சுய சந்தேகத்தையும் தவிர்த்துவிட்டால் வெற்றி நிச்சயம்”, என்றார்.

டாக்டர் செ.சைலேந்திரபாபு,IPS(Retd.)சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உருவான வரலாறு, உலக வரலாறு, தனது வாழ்க்கை அனுபவங்கள் என பல செய்திகளை மாணவர்களுடன் பகிர்ந்தார். பல மாணவர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்த அவர் பேசுகையில், “ஒரு IAS IPS அதிகாரியின் கையெழுத்துக்கு ஒரு வாழ்வையே மாற்றும் சக்தி இருக்கிறது, எல்லாருக்கும் உதவி செய்ய தொண்டு செய்வதோடு நமக்கு சம்பளமும் கிடைக்கும் அது தான் சிவில் சர்வீஸ். பல குடும்ப சிக்கல் சமூக சிக்கல் காரணமாக போலீஸ் வேலைய விட்டு பின்பு மீண்டும் வேலை வேண்டும் என்று கேட்ட 100 பெண் காவல் அதிகாரிகளுக்கு வேலை கொடுத்திருக்கேன், அந்த அதிகாரம் எனக்கு இருந்ததால் நான் அதைச் செய்தேன். எனவே மாணவர்களே வரலாறு படியுங்கள், பொருளாதாரம் படியுங்கள், தமிழ் ஆங்கிலம் அறிவியல் என அனைத்து துறையையும் பயின்று மக்களுக்கு தொண்டு செய்யும் அதிகாரிகளாக உருவாகுங்கள், நணபர்கள் உறவினர்கள் என யாரையும் எதிர்பார்க்காதீர்கள், அனைவருக்கும் என் வாழ்த்துகள்”, என்று வந்திருந்த மாணவர்களுக்கு வாழ்த்து கூறி விடைபெற்றார்.

கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் மற்றும் அகாடமியின் பேனலில் இருக்கும் பல ஓய்வுபெற்ற அதிகாரிகள் இணைந்து கடந்த ஆண்டு கிங்மேக்கர்ஸ் அகாடமியில் பயின்று அனைத்திந்திய ரேங்க் பெற்ற மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் மேடையில் கவுரவித்தார்கள்.

சத்யஸ்ரீ பூமிநாதன் பேசுகையில், “’உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பார்கள், நம் எண்ணம் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் போது பல அரசு பணிக்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த சிவில் சர்வீஸ் பயணத்தை தொடங்கிவிடடால் அறிவு அனுபவம் மற்றும் ஏதாவது ஒரு அரசு பணி நிச்சயம் கிடைக்கும், ஆனால் அவை யாவும் IAS IPS ஆபீசர்களுக்கு கிடைக்கும் அதிகாரத்தை தராது, எனவே அனைவரும் முயற்சி செய்து தமிழகத்திலிருந்து அதிக மாணவர்கள் சிவில் சர்வீஸ் அதிகாரிகளாக உயர்ந்து வெற்றிபெற வேண்டும்” என்றார்.

Source link