மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பிவாண்டியின் பாப்காவ் பகுதியில், தனது 3 வயது வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய 35 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பை அருகில் உள்ள கல்யான் என்ற இடத்தில் இருக்கும் கோர்ட்டிற்கு வெளியில் நோட்டரி செய்து கொடுப்பது தொடர்பான வேலைகள் செய்து வருபவர் மொகமத் இக்பால். இவர் ரேஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து இருந்தனர்.
அந்த 3 வயது குழந்தை பக்கத்து வீட்டுப் பெண்ணை “அம்மா” என்று அழைத்தது. இதனால் ஆத்திரமடைந்த வளர்ப்புத் தாய், குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். கோபத்தில் அந்தப் பெண் குழந்தையின்அடித்து உதைத்துள்ளார்.
அதோடு பக்கத்து வீட்டு பெண்ணை அம்மா என்று அழைக்கக்கூடாது என்று கூறி அடித்து உதைத்து மிரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பெண் தனது வளர்ப்பு மகளின் வாயிலும் கண்ணிலும் மிளகாய் பொடியை திணித்துள்ளார்.
இந்த காட்சியை அங்கு இருந்த அவரது கணவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். அதோடு சிறுமியை கொடுமைப்படுத்துவதை நிறுத்தும்படி மொகமத் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை தடுக்க பெரிய அளவில் முயற்சி எடுக்கவில்லை. அதே சமயம் அவர் எடுத்த வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோ வேகமாக பரவியது. அந்த வீடியோவின் அடிப்படையில் போலீஸார் தம்பதியினர் மீது வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் அவர்கள் குழந்தையை தத்து எடுத்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
