ஈரான் மீதான போரை நிறுத்துவது குறித்து சரியான நேரத்தில் முடிவு: டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பேசி முடிவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இஸ்ரேலை அழிக்க நினைத்த ஈரான், தன்னை சுற்றியுள்ள நாடுகளையும் அழிக்க திட்டமிட்டது. நாங்கள் இணைந்து செயல்பட்டுள்ளோம். இஸ்ரேலை அழிக்க நினைத்த நாட்டை தாக்கி அழித்துள்ளோம்.

போரை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்படும். போரை நிறுத்துவது குறித்து சரியான நேரத்தில் நான் முடிவு செய்வேன். அனைத்து விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்வோம்.

அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு இஸ்ரேல் மட்டும் ஈரான் மீது தனியாக தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என கருதுகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப்படைகளின் தாக்குதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த போர் 4 அல்லது 6 வாரங்கள் நீடிக்கும் என வெள்ளை மாளிகை கூறியிருந்த நிலையில், போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தெளிவாக கூற மறுத்துவிட்டார்.

டிரம்ப் தனது பேட்டியில், லஞ்சம், மோசடி உள்ளிட்ட வழக்குகளில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்காத அந்நாட்டு அதிபர் இசாக் ஹெர்சோக்கை விமர்சித்தார்.

டிரம்ப் கூறுகையில், நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். இஸ்ரேல் அதிபர் மன்னிப்பு வழங்காமல் மோசமான விஷயத்தை செய்து வருகிறார். போரில் தான் அவர் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மன்னிப்பு வழங்கும் விஷயத்தில் கவனம் செலுத்தக்கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்து இஸ்ரேல் அதிபர் மாளிகை வெளியிட்ட அறி்கையில் ‘ இஸ்ரேல் சட்டத்தின் ஆட்சியின் கீழ் நடக்கும் இறையாண்மைமிக்க நாடு. மன்னிப்பு குறித்த கோரிக்கை நீதித்துறை அமைச்சகம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

Source link