ஈரான் எண்ணெய் வளங்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலிடம் அதிருப்தி தெரிவித்த அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா தன் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது கடந்த 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடந்த 10 நாட்களாக பரஸ்பர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் அம்மையங்கள் தீப்பற்றி எரிந்தன. மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து, கடும் கோபடைந்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. ஏற்கனவே, போர் பதற்றத்தால் எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், ஜலசந்தி முடக்கத்தால், நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தாலும், எண்ணெய் வளங்கள் மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் அமெரிக்காவை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 28ம் தேதி போர் துவங்கிய பின் இரு நாடுகளுக்கு இடையே முதல்முறையாக பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய் மையங்களை ஏவுகணை ஏவுதலுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப ஈரான் பயன்படுத்தி வருவதால், தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்தது. ஆனாலும், அமெரிக்கா இத்தாக்குதல் குறித்து தன் அதிருப்தியை இஸ்ரேலிடம் வெளிப்படுத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்த நிலையில், பொருளாதார கட்டமைப்புகளை இவ்வளவு பெரிய அளவில் அழித்தது அமெரிக்காவை ஆச்சரியத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து டிரம்பின் ஆலோசகர் கூறுகையில், ‘அதிபருக்கு இந்த தாக்குதல் பிடிக்கவில்லை. அவர் எண்ணெய் வளத்தை பாதுகாக்கவே விரும்புகிறார். அதை அழிக்கக்கூடாது என்பதே அவரின் நிலைப்பாடு. தற்போதைய தாக்குதல் எண்ணெய் விலையை அதிகரிக்கக்கூடும். இது மக்களை பாதிப்பதுடன், அவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தும்’ என தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஒரு சுத்திகரிப்பு நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவுவதையும், நச்சு கலந்த கரும்புகை அப்பகுதி முழுதும் பரவி அந்நகரே பேரழிவில் சிக்கிய கொண்ட காட்சியை செய்தி நிறுவனம் ஒன்று வீடியோவாக வெளியிட்டுள்ளது.

மேலும், ஒரு கிடங்கில் இருந்து கசிந்த எரிபொருளில் தீ பிடித்து, அது வீதிகளில் நெருப்பு ஆறாக ஓடியதாக அந்நகர மக்கள் தெரிவித்தனர். மேலும், எண்ணெய் மற்றும் கரியுடன் கலந்த கருப்பு நிற மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும், அமில மழை குறித்த அறிக்கையால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source link