வாஷிங்டன்: வெனிசுலா அரசுக்கு சொந்தமான தங்க சுரங்க நிறுவனமான, ‘மினெர்வென்’ உடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வெனிசுலாவில் இருந்து, 900 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரையும், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் வெனிசுலாவுக்குள் அதிரடியாக நுழைந்து கைது செய்தது.
போதைப்பொருள் கடத்தலுக்கு இருவரும் உதவியதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ், தற்காலிக அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, அமெரிக்க உத்தரவுகளுக்கு கட்டுப்படாவிட்டால் தற்போதைய அதிபர் டெல்சி மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, வெனிசுலாவின் தற்போதைய நிர்வாகம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளத்துறையை தனியார் மயமாக்க சட்டம் இயற்றப்பட்டது. இதன் வாயிலாக அமெரிக்க நிறுவனங்கள் அங்கு தொழில் துவங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றிய அமெரிக்கா, தற்போது கனிம வளங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வெனிசுலா அரசு நிறுவனமான மினெர்வென் மீது இருந்த தடைகளை நீக்கி, அமெரிக்க நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்தில் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சியுடன், அமெரிக்க உள்துறை அமைச்சர் டக் பர்கம் நடத்திய பேச்சுக்குப் பின், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வெனிசுலா, 900 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. இது மினெர்வென் மீதான தடையை நீக்கியதற்கான பிரதிபலனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
நீண்ட காலமாக கொரில்லா குழுக்கள் மற்றும் பிற சட்டவிரோத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பகுதிகளில் இந்த கனிம வளங்கள் உள்ளதால், அப்பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு வெனிசுலா அரசு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாக பர்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா – வெனிசுலா இடையேயான ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா, கியூபாவை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மினர்வென் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
