மின்வாகன சார்ஜிங் மையம் அமைக்க இடம் : உரிமையாளர் – நிறுவனம் ஒருங்கிணைப்பு தளம்

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு தடையின்றி ‘சார்ஜிங்’ வசதி கிடைக்க, சார்ஜிங் மையத்துக்கு இடம் வழங்க விரும்பும் உரிமையாளர்களை யும், சார்ஜிங் மையம் அமைக்கும் நிறுவனங்களையும் ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை, பசுமை எரிசக்தி கழகம் செயல்படுத்த உள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுதும் சுற்றுச்சூழலை பாதிக்காத, மின்சாரத்தில் ஓடும் இரு சக்கர வாகனங்கள், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.

இந்த வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா, 3 கி.மீ., துாரத்துக்கும், நெடுஞ்சாலைகளில் தலா, 25 கி.மீ., துாரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்பட உள்ளது.

எனவே, அரசு துறைகள் நேரடியாகவும், தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சார்ஜிங் மையம் அமைக்க இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

எனவே, தனியார் இடத்தில் சார்ஜிங் மையம் அமைக்க, இடத்தின் உரிமையாளர் மற்றும் சார்ஜிங் மையம் அமைக்கும் நிறுவனத்தை ஒருங்கிணைக்க, தனி இணையதளம் உருவாக்கும் பணியில் தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டுள்ளது.

இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் வாயிலாக, அந்த இணையதளத்தில், சார்ஜிங் மையம் அமைக்க இடம் வழங்க விரும்பும் உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். அந்த தளத்தில், நிறுவனங்களின் விபரங்களும் இருக்கும். இரு தரப்பும் தங்களுக்குள் நேரடியாக பேசி சார்ஜிங் மையம் அமைக்கலாம்.

இடத்தின் உரிமையாளருக்கு வாடகை வருவாய் கிடைக்கும். நிறுவனங்களுக்கு விரைவாக இடம் கிடைக்கும் என்பதால், அதற்கு ஏற்ப சார்ஜிங் மையங்களும் துரிதகதியில் அமைக்கப்படும். எனவே, மின்சார வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்கும்.

மொபைல் செயலி

தமிழகம் முழுதும் எந்தெந்த இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் உள்ளன என்பதை மொபைல் போனிலேயே தெரிந்து கொள்ளும் வகையில், தனி மொபைல் போன் செயலியையும், பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கி வருகிறது. இந்த பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது. இதனால், மின்சார வாகனங்களில் செல்வோர், தாங்கள் செல்லும் வழித்தடத்தில் எந்த இடத்தில், எவ்வளவு துாரத்தில் சார்ஜிங் மையம் உள்ளது என்பதை அறியலாம். அதற்கு ஏற்ப, சார்ஜிங் செய்வதற்கான பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Source link