ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சொந்த மண்ணில் ‘டி-20’ உலக கோப்பை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை படைத்த இந்தியா, தொடர்ச்சியாக 2 கோப்பை (2024, 2026), ஒட்டுமொத்தமாக 3 கோப்பை (2007, 2024, 2026) வென்ற முதல் அணியானது.
முத்தான மூன்று சாதனை படைத்த இந்திய அணியினருக்கு சச்சின், கங்குலி, கோலி, யுவராஜ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சச்சின்: இந்திய அணி கோப்பை வெல்ல தகுதியானது. தொடரின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மும்பை மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த வெற்றி கொண்டாடப்பட்டது. ‘வெல்டன் இந்தியா’, ‘ஜெய் ஹிந்த்’.
கங்குலி: ‘டி-20’ உலக கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். மிகவும் பலம் வாய்ந்த அணி இது. முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது, இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தியது.
கோலி: ஆமதாபாத்தில் இந்திய அணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இக்கட்டான சூழ்நிலையில், மனம் தளராமல் போராடி மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்றது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர், அணி நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்.
யுவராஜ் சிங்: மிகப் பெரிய தொடரில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது இந்திய அணியின் தனித்திறமையை வெளிப்படுத்தியது. சஞ்சு சாம்சன் ‘மேட்ச் வின்னராக’ ஜொலித்தார். பைனலில் சாம்சன், இஷான் கிஷான், அபிஷேக் ரன் மழை பொழிந்த விதம் பாராட்டுக்குரியது.
ஹர்பஜன் சிங்: இத்தொடரின் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி, மீண்டும் கோப்பை வென்ற இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்.
ஆகாஷ் சோப்ரா: வரலாறு தொடர்ந்தது. வரலாறு முறியடிக்கப்பட்டது. வரலாறு உருவாக்கப்பட்டது.
தோனி புகழாரம்
கடந்த 2007ல் முதல் முறையாக ‘டி-20’ உலக கோப்பை வென்று தந்த முன்னாள் இந்திய கேப்டன் தோனி கூறுகையில், ”ஆமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியினருக்கும், உலகெங்கிலும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள். இந்திய வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது. பயிற்சியாளர் காம்பிர் சிரிப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தது. பும்ரா ஒரு சாம்பியன் பவுலர்,” என்றார்.
