சென்னை: ‘மேற்காசிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சூழலில், பயணியருக்கு ‘ரீபண்ட்’ தொகை முழுமையாக வழங்கப்படும்’ என, விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக, கடந்த பிப்.,28ம் தேதியில் இருந்து, மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய, விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
துபாயில் சிக்கி தவிக்கும் பயணியர் வெளியேறுவதற்காக, அந்நாட்டு அரசு குறிப்பிட்ட சில நாடுகளின் விமானங்களை இயக்க, அனுமதி அளித்தது.
எனினும், விமானப் போக்குவரத்து, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
சென்னையில் இருந்து, குவைத், அபுதாபி, மஸ்கட், பஹ்ரைன், தோஹா ஆகிய இடங்களுக்கு, எத்தியாட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, கல்ப் ஏர், கத்தார் ஏர்வேஸ், ஏர் அரேபியா ஆகிய நிறுவனங்கள், விமானங்களை இயக்குகின்றன.
சில மாதங்களுக்கு முன்பே, ஏராளமானோர் மேற்காசிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டு, விமானத்தில் டிக்கெட்’முன்பதிவு செய்திருந்தனர்.
தற்போதுள்ள சூழ்நிலை யில், முன்பதிவு செய்த நாளில், விமானங்கள் இயக்கப்படுமா, விமானங் கள் இயக்கப்படாவிட் டால், டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்குமா என்ற சந்தேகம், ஏராளமானோருக்கு எழுந்துள்ளது.
இது குறித்து, விமான நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:
மேற்காசிய நாடுகளுக்கு, தற்போது எமிரேட்ஸ், ஏர் அரேபியா, ஓமன் ஏர், சலாம் ஏர் ஆகிய விமான நிறுவனங்கள் மட்டுமே, விமான சேவைகளை வழங்க முன்வந்துள்ளன.
மற்ற நாட்டு விமான நிறுவனங்கள், விமானங்கள் இயக்க முன்வரவில்லை. இந்த நிலை அடுத்த ஒரு வாரத்துக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் பயணியருக்கு முன்கூட்டியே, எஸ்.ஒ.பி., எனும் நிலையான இயக்க முறைப்படி, விமானம் ரத்து தொடர்பான தகவல்கள், ரீபண்ட், மாற்று தேதி பயணம் உள்ளிட்டவை குறித்து உடனுக்குடன், தகவல் தெரிவிக்கப்படும், டிக்கெட் கட்டணம் திரும்ப கிடைக்காதோ என, பயப்பட வேண்டாம்.
பயணியரின் டிக்கெட் கட்டணம் முழுதும் எவ்வித பிடித்தமுமின்றி திரும்ப தரப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
