லண்டன்: ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் இரண்டு நாட்களில், எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை திரவ எரிவாயு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரால் உலக அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
தாக்குதலால், சவுதி அரேபியா, கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் சேதமடைந்துள்ளதால், உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனால், எல்.என்.ஜி., டேங்கர்கள் ஐரோப்பாவுக்கு பதிலாக ஆசியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. எனவே ஐரோப்பிய நாடுகள் அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டிய சூழல் உருவாகிஉள்ளது.
குறிப்பாக பிரிட்டன் தேசிய எரிவாயு நிறுவனத் தரவுகளின்படி, இன்னும் இரண்டு நாட்களுக்கு தேவையான ‘காஸ்’ மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. பிரிட்டனின் மற்ற எரிவாயு சேமிப்பு 12 நாட்கள் அளவுக்கு மட்டுமே உள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 90 முதல் 100 நாட்களுக்கு தேவையான எரிவாயு இருப்பதாகக் கூறப்படுகிறது.
