– நமது நிருபர் –
த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, 23 கட்சிகளுடன் மெகா கூட்டணியை தி.மு.க., அமைத்துள்ளது. இது தவிர, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
அதேநேரம், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய காங்கிரசும், தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியே செல்லவில்லை. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., – பா.ஜ., தவிர குறிப்பிடும்படியான பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,வையும், கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை.
த.வெ.க., கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால், வலுவான மும்முனை போட்டி ஏற்படும். சிறுபான்மை ஓட்டுகள் பிரிந்து தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, அ.தி.மு.க., – பா.ஜ., கணக்குப் போட்டன.
ஆனால், கடந்த 5ம் தேதி தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை வலுப்படுத்தாவிட்டால், தி.மு.க., அணியை எதிர்கொள்வது கடினம் என்ற முடிவுக்கு பா.ஜ., தலைமை வந்துவிட்டது.
கூட்டணியை வலுப்படுத்த வேண்டுமானால், த.வெ..க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 11ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உருவானது முதலே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாயிலாக, விஜயுடன் பா.ஜ., பேச்சு நடத்தியது; ஆனாலும், அது நடக்கவில்லை.
இப்போது, தி.மு.க., கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால், மீண்டும் த.வெ.க.,வை கொண்டு வர, பா.ஜ., முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வுக்கு எதிரான சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டும் என்பதை ஆரம்பம் முதலே, மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி வருகிறார். பன்னீர்செல்வம் தி.மு.க.,விலும், அதன் கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இணைந்த பின், த.வெ.க.,வை சேர்க்க அமித் ஷா விரும்புகிறார்.
ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அதற்கு தயங்குகிறார். ‘அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். நான் தான் முதல்வர்’ என, பழனிசாமி திரும்ப திரும்ப கூறி வருகிறார். கூட்டணிக்குள் விஜய் வந்தால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் ஏற்படும். இதனால், விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பழனிசாமி தயங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
த.வெ.க.,வுடன் பேச்சு நடப்பதால், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., – பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சு இன்னமும் துவங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
