தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்க திட்டம்: திரிணமுல் தலைமையில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை பார்லி.,யில் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு, சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 74 லட்சம்; மேற்கு வங்கத்தில் 63 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப் பட்டனர்.

இரு இடங்களில் பெயர் பதிவு, உயிரிழந்தோர், நிரந்தரமாக இடம் பெயர்ந்து சென்றவர்கள் ஆகியோரின் பெயர்களே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

வரைவு தயார்

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜ.,வுக்கு சாதகமாகவே இப்பணி நடந்ததாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன.

குறிப்பாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து, காலவரையற்ற தர்ணா போராட்டத்தையும் துவங்கி உள்ளார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை, பார்லி.,யில் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வாரமே பதவி நீக்க நோட்டீஸை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து திரிணமுல் காங்., மூத்த எம்.பி., ஒருவர் கூறியதாவது:

தலைமை தேர்தல் கமிஷனரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான வரைவு தயார் செய்யப்பட்டு விட்டது. ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் இணைந்து குழுவாக இதை தயாரித்துள்ளன.

காங்., ஆதரவு

பார்லி.,யின் இரு சபைகளிலும் விரைவில் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும். தான் வகிக்கும் உயர் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தலைமை தேர்தல் கமிஷனர் நடந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திரிணமுல் காங்., தயாரித்த இந்த நோட்டீசுக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்., ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் லோக்சபா எம்.பி.,க்கள் 100 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 50 பேரும் கையெழுத்திட வேண்டும் என்பது விதி. அப்போது தான் பதவி நீக்க கோரும் தீர்மானம் பிறப்பிக்க முடியும்.

உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்க கடைப்பிடிக்கப்படும் அதே நடைமுறைகள் தான், தலைமை தேர்தல் கமிஷனர் விவகாரத்திலும் பின்பற்றப்படும். பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் அல்லது மோசமான நடத்தை கொண்டவர் என்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும்.

கொல்கட்டாவில் கருப்பு கொடி மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கட்டாவில் உள்ள காளி கோவிலுக்கு வழிபாடு நடத்தச் சென்ற தலைமை தேர்தல் கமிஷனருக்கு, திரிணமுல் காங்., கட்சியினர் நேற்று கருப்பு கொடி காண்பித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரும்பி செல்லும்படி அவருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். இதனால், பதற்றம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த போலீசார், எதிர்ப்பு தெரிவித்தவர்களை கட்டுப்படுத்தி, தலைமை தேர்தல் கமிஷனர் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்தனர்.

Source link