மேல்முறையீடு தாக்கலுக்கு தாமதம் செய்யும் போக்குக்கு  கண்டனம்!: இரும்புக்கரம் கொண்டு அடக்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை

– டில்லி சிறப்பு நிருபர் -:

நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாமல் காலம் கடத்திவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தாமதமாக மேல்முறையீடு செய்யும் போக்கை, உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது. இத்தகைய நேர்மையற்ற மனுதாரர்கள் யாராக இருந்தாலும், குறிப்பாக அரசு அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநில வன உற்பத்தி கூட்டுறவு சம்மேளனம் தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை செயல்படுத்த, அதிகாரிகள் மூன்று மாத அவகாசம் கோரியிருந்தனர். ஆனால், அந்த அவகாசம் முடிந்தும் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.

இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதை எதிர்த்து அதிகாரிகள் அவசர அவசரமாக சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

பழக்கம்

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு வழக்கில் தாமதமாக மேல்முறையீடு செய்வது என்பது விதிவிலக்காக இல்லாமல், நடைமுறை பழக்கமாகவே மாறிவிட்டது.

நீதிமன்ற உத்தரவுகளை நீண்டகாலம் மதிக்காமல் இருந்துவிட்டு, அவமதிப்பு வழக்கு தொடரும்போது மட்டும் அவசரமாக மேல்முறையீடு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

இது, நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைப்பதாகும். சில நேரங்களில் இந்த போக்கு, குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு இணையானது.

அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்டத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயலாற்ற வேண்டும்.

ஆனால், அவர்களே தந்திரத்தை கையாள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு உயர் நீதிமன்றங்கள் அடக்க வேண்டும்.

தவறு

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது என்பது சீராய்வு மனுவின் முடிவை பொறுத்தது என அதிகாரிகள் கூறுவது சட்டப்படி தவறு. முந்தைய உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பின் நகலை, மத்திய – மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு அதிகாரிகளை வன்மையாக கண்டித்த நீதிபதிகள், முந்தைய தீர்ப்பை செயல்படுத்த கடைசியாக ஒரு வாய்ப்பு தருவதாக குறிப்பிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link