மும்பை:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பாலிமர் விலை கடந்த ஒரே வாரத்துக்குள் 45 – 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது, இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது என, ஏ.ஐ.பி.எம்.ஏ., எனப்படும் அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
பிளாஸ்டிக் தொழில்துறையில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் வரை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே உள்ளன. இத்தகைய திடீர் விலையேற்றத்தை தாங்கும் சக்தி சிறிய நிறுவனங்களுக்கு இல்லை.
அடிக்கடி உயரும் விலை, மூலப்பொருள் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் போதிய கையிருப்பு வைப்பதற்கான வசதி இல்லாதது போன்ற காரணங்களால் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது, ஒட்டுமொத்தத் துறையின் லாபத்தையும் பெரிய அளவில் பாதிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
