சிட்னி: ஈரான் தேசிய கீதத்தை பாட மறுத்து சர்ச்சையில் சிக்கிய, ஈரான் கால்பந்து வீராங்கனைகளுக்கு, மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியா அரசு விசா வழங்கியுள்ளது.
ஈரானில் பெண்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில விளையாட்டு வீராங்கனைகள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஈரான் தேசிய கீதம் ஒலிக்கும்போது, அந்நாட்டை சேர்ந்த ஐந்து வீராங்கனைகள், தேசியகீதத்தை பாட மறுத்தனர். இதனால் அவர்கள் மீது ஈரானில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் வெளிநாட்டில் தங்க விரும்பினர். இந்நிலையில், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு தஞ்சம் அளிக்க ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இதற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அவர்களை அமெரிக்கா ஏற்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அரசு அந்த ஐந்து வீராங்கனைகளுக்கும், மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கி உள்ளது.
