மானாமதுரை: விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மானாமதுரையில், ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் மூன்றாம் நாளாக மறியல் நடப்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷின் மரணத்திற்கு நீதி கோரி மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் 3வது நாளாக இன்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆகாஷின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.
இதனால், பட்டியலின மக்கள் தொடர்ந்து நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளும் சாலை மறியல் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் போராட்டம் நடந்து வருவதினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
