1 மாதத்தில் 40 லட்சம் டன் சரக்குகள் துாத்துக்குடி துறைமுகம் சாதனை

துாத்துக்குடி : துாத்துக்குடி துறைமுகம், ஒரே மாதத்தில் 40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து துாத்துக்குடி வ.உ.சி., துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கை:

துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தற்போதைய நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை, 3 கோடியே 50 லட்சத்து 97,000 டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில், 3 கோடியே 30 லட்சத்து 94,000 டன் சரக்குகள் கையாளப்பட்டிருந்தது.

இத்துறைமுகம், 20 லட்சம் டன் சரக்குகளை கூடுதலாக கையாண்டு 6 சதவீத வளர்ச்சி அடைந்து உள்ளது. கடந்த மாதம், 40 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு, ஒரே மாதத்தில் அதிக சரக்குகளை கையாண்ட வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன், 2024 மார்ச் மாதத்தில் 39.5 லட்சம் டன் சரக்குகள் கையாண்டது சாதனையாக இருந்தது.

துறைமுகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உயர் திறன் கொண்ட நகரும் பளு துாக்கிகள், வடக்கு சரக்கு தளம் மூன்றின் முழுமையான செயல்பாடு, நான்காவது உயர்திறன் இழுவைப் படகு, சரக்கு சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் போன்ற திட்டமிட்ட மேம்பாடுகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link