கோவை: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் விளக்கு ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிந்தும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, உள்நோக்கத்துடன் செயல்பட்ட மதுரை கலெக்டர், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதித்துள்ளனர்.
ஆனால், தற்போது, ‘நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை’ என மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது, நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல்.
இவர்கள், அப்பீல் செய்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். தீர்ப்பு கொடுத்த நீதிபதியை பதவிநீக்கம் செய்யக் கோரிய தி.மு.க., மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு துாண்டுகோலாக இருந்தவர்களும் இவர்கள் தான்.
நீதிபதி சுவாமிநாதனை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவதுாறு பரப்பி நடந்த போராட்டங்களுக்கு, அனுமதியும் பாதுகாப்பும் அளித்ததும் இவர்கள் தான்.
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, பெருமாள் கோவில் பட்டியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதிலும், 144 தடை உத்தரவை கலெக்டரும், போலீசாரும் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பாகும். மன்னிப்பு கேட்டு, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முயற்சிக்கின்றனர்.
‘சட்டம் என்ன செய்யும்’ என்பதை தெரிந்தே தவறு செய்துள்ளனர். ஆளுங்கட்சி நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, ஆதாயத்துக்காக இந்தக் குற்றத்தை செய்துள்ளனர். அதற்கேற்ப தண்டனையை அவர்களுக்கு வழங்க நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
வரும் காலங்களில், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், இதே உத்தியை அதிகாரிகள் பின்பற்றுவதற்கு நீதிமன்றம் இடம் தரக்கூடாது.
மக்களுக்கான நீதி கிடைக்கும் இடம், நீதிமன்றங்களே. அப்படி கிடைத்த நீதியை அமல்படுத்தாமல் தடுக்கும் அதிகாரிகளையும் அரசையும் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
