சென்னை: கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் மார்ச் 15ல் ஆஜராகுமாறு தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சிபிஐ புதிய சம்மன் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
கரூரில் தவெக பிரசாரக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மனை ஏற்று நடிகர் விஜய் ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
மார்ச் 10ம் தேதியான இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சி நிர்வாகிகளை அழைத்து விஜய் இன்று நேர்காணல் நடத்தினார். இது குறித்து நிருபர்களிடம் பேசிய தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், மார்ச் 15ல் ஆஜராகுமாநு தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சிபிஐ புதிய சம்மன் ஒன்றை அனுப்பி இருக்கும் விவரத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது;
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று முதல்கட்ட நேர்காணல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் இதற்கான பணிகள் நிறைவடையும். எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று நடிகர் விஜய் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். பாஜவுடன் கூட்டணி குறித்து அழுத்தம் தரப்படுவதாக நிறைய யூகங்கள் வெளியாகி உள்ளன. எந்த யூகங்களுக்கும் நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை.
கடந்த வாரம் சிபிஐ சம்மன் விஜய்க்கு அனுப்பப்பட்டு இருந்தது. நிறைய பணிகள் அவருக்கு இருந்ததால் வேறு ஒரு தேதியையும், விசாரணையை சென்னைக்கும் மாற்றி கேட்டிருந்தோம். மார்ச் 15ம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலையில் தான் சம்மன் வந்தது. நாங்கள் வேறு தேதியை கேட்டிருந்தோம். இந்த சம்பவத்தில் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி. 41 பேர் கொலைக்கு முக்கிய குற்றவாளி செந்தில்பாலாஜி என்று உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டு நயினார் நாகேந்திரன் ஏற்கனவே சொல்லி இருந்தார். எனவே செந்தில் பாலாஜி தான் இதில் விசாரிக்கப்பட வேண்டிய முதல்நபர்.
வேட்பாளர் பட்டியல் என்று வெளியிடப்படுமோ அன்று விஜய் வெளியிடுவார். ஒவ்வொரு தொகுதிக்கும் 150க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் தகுதி வாய்ந்தவர்களை தனித்தனியே அழைத்து விஜய் சந்தித்து வருகிறார்.
திமுக இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நேற்றைய மாநாட்டுக்கு மட்டும் 250 கோடி ரூபாயை திமுக அமைச்சர்கள் செலவு செய்திருப்பார்கள். இந்த பணம் எங்கிருந்து வந்தது. இதே அமைச்சர் நேரு மீது 3000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. நேற்றைய மாநாடு பணத்தால் நடத்தப்பட்டது. இது ஒன்றும் பெரிய வெற்றியல்ல.
இவ்வாறு சிடிஆர் நிர்மல்குமார் கூறினார்.
