அமெரிக்கா உடனான வர்த்தகம் குறித்த டிரம்ப் அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்று இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ், வர்த்தகத்தின் போது தலா 5 சதவீதம் உயர்வு கண்டன. இதனால், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்தது.
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்து இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் மளமளவென ஏற்றத்துடன் துவங்கின. குறிப்பாக, ஏற்றுமதி தொடர்புடைய ஜவுளி, தோல் பொருள்கள், நகை, ஆபரணங்கள், கடல் உணவு பொருள்கள் மற்றும் சிறப்பு ரசாயன துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர்.
இதனையடுத்து, நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 4,205 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 1,252 புள்ளிகளும் உயர்வு கண்டன.
சென்செக்ஸ் குறியீட்டில், அதிகபட்சமாக, அதானி போர்ட்ஸ் பங்குகள் 9.12 சதவீதம் உயர்வு கண்டது. வர்த்தக நேர முடிவில், நிப்டி 639 புள்ளிகள் உயர்ந்து, 25,727.55 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 2,072 புள்ளிகள் உயர்ந்து, 83,739.13 புள்ளிகளுடன் நிறைவடைந்தன.
இரு குறீயீடுகளும் தலா 2.50 சதவீதம் உயர்வை பதிவு செய்தன. இதனால், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 12.10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டினர்.
