புதுடில்லி: பாஜவின் நவீன் ஜிண்டால் மற்றும் காங்கிரசின் பிமோல் அகிசம் அங்கம்சா ஆகியோர் தங்களுக்கான எம்பிக்கள் சம்பளத்தை ஏற்க மறுத்துள்ள விவரம் வெளியாகி உள்ளது.
பார்லிமென்டில் அரசியல் ரீதியிலான பிரச்னை என பல இருந்தாலும், சம்பளம் மற்றும் சலுகை அடிப்படையில் அனைத்து கட்சிகளின் கருத்தும் ஒன்றாக இருக்கும். ஆனால், தற்போது லோக்சபாவில் எம்பிக்களாக இருக்கும் இரண்டு பேர் சம்பளத்தை ஏற்க மறுத்துள்ளனர். இந்த விவரம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
சம்பளத்தை ஏற்க மறுத்துள்ளவர்ளில் ஒருவரான பாஜவின் நவீன் ஜிண்டால். ஹரியானா மாநிலம் குருசேத்திரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். சம்பளத்தை மட்டும் அல்லாமல், இன்ன பிற சலுகைகளையும் தமக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் மற்றொருவர் காங்கிரசின் பிமோல் அகிசம் அங்கம்சா . இவர் மணிப்பூர் மாநிலம் இன்னர் மணிப்பூர் தொகுதி எம்பி. அனைத்து சலுகைகளையும் ஏற்றுக் கொண்டு சம்பளத்தை மட்டும் நிராகரித்துள்ளார்.
18 வது லோக்சபாவில் கோடீஸ்வர எம்பிக்களில் ஒருவர் நவீன் ஜிண்டால். பெரும் தொழிலதிபரான இவர், வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு, 1,241 கோடி ரூபாய் என தெரிவித்து இருந்தார்.
பிமோல் அகிசம் அங்கம்சா தன சொத்து மதிப்பாக 97 லட்ச ரூபாய் என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
லோக்சபாவில் தற்போது எம்பிக்களாக இருப்பவர்களில் கோடீஸ்வரர் என்ற பெருமை ஆந்திர மாநிலம் குண்டூர் தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்வான சந்திர சேரை சாரும். அவரின் சொத்து மதிப்பு 5,705 கோடி ரூபாய். அடுத்த இடத்தில், பாஜ எம்பி கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டி 4,568 கோடி ரூபாய் சொத்துடன் அடுத்த இடத்தில் உள்ளார். இவர்கள் இருவரும் தங்களுக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
