திருச்சி: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். காஸ் டீலர் நானே சொல்கிறேன். சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய். ஒருமுறை சிலிண்டர் பெற்ற பிறகு, அடுத்த 20 நாட்களுக்குப் பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும் வகையில் கணினி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நான் காஸ் சிலிண்டர் டீலர். சிலிண்டர் தட்டுப்பாடு எங்குமே கிடையாது.
20 நாட்களுக்குள் யாருக்காவது சிலிண்டர் தேவைப்பட்டால் உங்களுக்கு நான் தருகிறேன். நீங்கள் எங்கு புக் செய்தீர்களோ அங்கு நான் தருகிறேன். எங்கு வேண்டுமானாலும் நான் தர சொல்கிறேன். ஹோட்டல்களில் உணவு குறைக்கப்பட்டதற்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு என எதிர்க்கட்சியினர் எழுதி போட்டு இருக்கலாம். உலகப் போரால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடியோ அல்லது கட்டுப்பாடோ எதுவும் இல்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. பாஜ சார்பில் தனியாகவும், தேஜா கூட்டணி சார்பாகவும் வாக்குறுதிகள் அளிப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
