சென்னைக்கு முதல் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

கொச்சி: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. லீக் போட்டியில் 1-0 என, கேரளாவை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. கேரளாவின் கொச்சியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கேரளா அணிகள் மோதின. இதில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் இம்முறை முதல் வெற்றியை பெற்றது. சென்னை அணிக்கு இம்ரான் கான் (42வது நிமிடம்) ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.

இதுவரை விளையாடிய 4 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு ‘டிரா’, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் சென்னை அணி 8வது இடத்துக்கு முன்னேறியது. வரிசையாக நான்காவது போட்டியில் தோல்வியடைந்த கேரளா அணி 12வது இடத்தில் உள்ளது.

கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் முகமதன், பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 2-1 என வெற்றி பெற்றது. பெங்களூரு அணிக்கு ரியான் வில்லியம்ஸ் (22வது நிமிடம்), ஆஷிக் (41வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முகமதன் அணிக்கு ராய் மஹிதோஷ் (51வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி, ஒரு ‘டிரா’, ஒரு தோல்வி என, 7 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 6வது இடத்துக்கு முன்னேறியது. தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை பெற்ற முகமதன் அணி 14வது இடத்தில் நீடிக்கிறது.

Source link