'இ–வே பில்' உருவாக்கம் பிப்ரவரியில் 18.80% உயர்வு

புதுடில்லி: நாட்டில் ‘இ–வே’ பில்கள் உருவாக்கம், பிப்ரவரி மாதத்தில் 18.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஜி.எஸ்.டி., நெட்வொர்க் எனும் மத்திய அரசு அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு கூறியுள்ளதாவது:

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களின் மதிப்பு 50,000 ரூபாய் வரம்பைத் தாண்டினால், மின்னணு முறையில் உருவாக்கப்படும் ஆவணமே ‘இ–வே பில்’ ஆகும். பிப்ரவரி மாதத்தில் 13.26 கோடி இ–வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தைவிட 18.8 சதவீத வளர்ச்சி ஆகும்.

இவ்வாண்டு ஜனவரியில் 13.68 கோடி பில்கள் உருவாக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை பதிவான மாதாந்திர எண்ணிக்கைகளில் இது 3வது அதிகபட்ச அளவு ஆகும். கடந்த 2025 செப்., 22ல் ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்குப் பின் டிசம்பரில் 13.84 கோடி இ–வே பில்கள் உருவாகின.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக இ—வே பில்லில் சரக்கை அனுப்புபவர், பெறுபவர், கொண்டு செல்பவர் ஆகிய விபரங்கள் இடம்பெறும். இதன் வாயிலாக ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என்பதுடன் சரக்கு வாகனம் எங்கு செல்கிறது என்பதையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியும்.

Source link