எல் சால்வடார் வீரர்கள் சாதனை * ரவுண்ட் அப்

கார்டினா: வடக்கு, தெற்கு பகுதியை பிரிக்கும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடு எல் சால்வடார். ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் இருக்கும். இங்கு பனிப்பொழிவை காண்பதே அரிது. இங்கு, கடந்த 2010ல் கும்பல்களுக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கியவர் ஜோனாதன் அரியாஸ் 28.

இதேபோல 14 வயதில் கொள்ளைக்கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கினார் சாவேஸ் 27. இருவருக்கும் இடுப்புக்கு கீழ் பகுதி செயல் இழந்தது. மனம் தளராத இவர்கள், பயிற்சியாளர் ராப் உதவியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டனர். பின் கரையை தொடும் மணல் கலந்த அலை நீரில், பனிச்சறுக்கு போல பயிற்சி செய்தனர்.

தற்போது, குளிர்கால ஒலிம்பிக் அல்லது குளிர்கால பாராலிம்பிக்கில் எல் சால்வடார் சார்பில் பங்கேற்கும் முதல் நட்சத்திரங்கள் என சாதனை படைத்துள்ளனர். இத்தாலியின் கார்டினாவில் ‘கிராஸ்-கன்ட்ரி’ பிரிவு போட்டியில் பங்கேற்கின்றனர்.


நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் மூன்றாவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீசின் மரியா சக்காரியை எதிர்கொண்டார். இதில் அசத்திய ஸ்வியாடெக், 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மரியாவை வீழ்த்தினார்.


பேட்டிங் பயிற்சியாளர் ஹைடன்

ஆமதாபாத்: ஆஸ்திரேலிய அணி முன்னாள் துவக்க வீரர் மாத்யூ ஹைடன் 54. மூன்று வித கிரிக்கெட்டில் 273 போட்டிகளில் 15,066 ரன் எடுத்தார். இரு முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர். பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக (2008-10) 32 போட்டியில் பங்கேற்றார். மார்ச் 28ல் துவங்கவுள்ள பிரிமியர் தொடரில், குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எக்ஸ்டிராஸ்

* டில்லியில் இன்று உலக பாரா தடகள கிராண்ட் பிரீ போட்டி துவங்குகிறது. மார்ச் 13 வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா சார்பில் அதிகபட்சம் 257 பேர் பங்கேற்கின்றனர்.

* இந்திய அணி முன்னாள் வீரர் ஹேமங் பதானி . பிரிமியர் தொடரில் டில்லி அணி பயிற்சியாளராக உள்ளார். தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ள ‘தி ஹண்டிரடு’ தொடரில் சவுத்தர்ன் பிரேவ் அணிக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* மஹாராஷ்டிராவில் 20 ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்களை நடத்த, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

* சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மெய்ரபா, 21-13, 16-21, 20-22 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சாங் யோங் பார்க்கிடம் தோல்வியடைந்தார்.

* தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உலக குத்துச்சண்டை பியூட்சர்ஸ் கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த போட்டிகளில் இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), ஜாய்ஸ்ரீ தேவி (54), அம்பேத்கர் (50), குன்ஜன் (48), பிராச்சி (60) என ஐந்து வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

Source link