புதுடில்லி: நீதித்துறை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியதுடன், சம்பந்தப்பட்ட முழு பாடப்புத்தகத்தையும் திரும்பப் பெற்றது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பிலான பாடத்தை என்.சி.இ.ஆர்.டி., சேர்த்தது.
இதில் வழக்குகள் தேக்கம், நீதிபதிகள் பற்றாக்குறை, நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்கள் ஆகியவை பெரும் சவாலாக குறிப்பிடப்பட்டிருந்தன. இது சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து, இந்த விவகாரத்தை கடந்த மாதம் விசாரணைக்கு எடுத்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்ததுடன், என்.சி.இ.ஆர்.டி.,யின் சர்ச்சைக்குரிய பாடப் புத்தகத்திற்கு தடை விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர், பள்ளி கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், சர்ச்சைக்குள்ளான பாடப்புத்தகத்தை முழுமையாக திரும்பப் பெற்றுள்ளதாக என்.சி.இ.ஆர்.டி., நேற்று அறிவித்தது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில், 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் அத்தியாயம் இடம்பெற்றிருந்தது. இதற்கு, என்.சி.இ.ஆர்.டி., இயக்குநர், அதன் உறுப்பினர்களும் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோருகிறோம்.
சம்பந்தப்பட்ட புத்தகம், முழுமையாக திரும்பப் பெறப்பட்டுவிட்டது. தற்போது, அது புழக்கத்தில் இல்லை. இதனால், ஏற்பட்ட அசவுகரியத்திற்கு மனப்பூர்வமாக வருந்துகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
