'ஈரான் மீதான போர் இன்ப சுற்றுலா': அமெரிக்க அதிபர் விமர்சனம்

வாஷிங்டன்: ஈரானுடனான போரை குறுகிய கால இன்பச் சுற்றுலா என்றும், அது விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அதேவேளையில், கச்சா எண்ணெய் வினியோகத்தை தடுத்தால், ஈரான் மீளா துயரத்தை சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகின்றன. சமீபத்தில் ஈரான் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அவை பலத்த சேதமடைந்ததுடன், தீப்பற்றி எரிந்து வருகின்றன.

எச்சரிக்கை

இதனால், ஆத்திரமடைந்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானுக்கு எதிரான போர் குறுகிய காலமே நீடிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 11 நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது: சில தீமைகளை அகற் றுவதற்காக, மேற்காசியாவில் நாங்கள் குறுகிய இன்பச் சுற்றுலா சென்றோம். இது குறுகிய பயணமாக இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

அதே நேரத்தில் கச்சா எண்ணெய் வினியோகத்தை தடுக்கும் விதமாக ஈரான் ஏதாவது விஷமதனத்தில் ஈடுபட்டால், மீளாத் துயரத்தை அது சந்திக்க நேரிடும். இதுவரை நடந்த தாக்குதலைவிட, 20 மடங்கு அதிக தாக்குதலை சந்திக்க நேரிடும்.

பதிலடி

மேலும், மீண்டு எழ முடியாத அளவுக்கு ஈரானின் அனைத்து உள்கட்டமைப்பு களையும் சிதைத்து விடுவோம். இது நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தி தொடர்பாளர் அலி முகமது நைனி கூறுகையில், “போர் எப்படி, எப்போது முடிவுக்கு வரும் என்பதை அமெரிக்கா அல்ல; ஈரான் தான் முடிவு செய்யும்,” என கூறியுள்ளார்.

இந்நிலையில், போரில் இதுவரை ஈரானில் 1,332 பேரும், லெபனானில் 397 மற்றும் இஸ்ரேலில் 11 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘ஒரு லிட்டர் எண்ணெய் கூட அனுப்ப விட மாட்டோம்’

எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் தாக்கினால் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய இலக்குகளை தொடர்ந்து குறி வைத்தால், உலகளாவிய எண்ணெய்க்கான முக்கிய போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா கைப்பற்றும் என டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். மேலும், போரை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கூறியுள்ளதாவது: ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட அனுப்ப அனுமதிக்க மாட்டோம். போரை எப்போது முடிக்க வேண்டும் என்பதை அமெரிக்கா அல்ல, நாங்கள் தான் முடிவு செய்வோம். இவ்வாறு அது கூறியுள்ளது.

Source link