தேவகோட்டை: தேவகோட்டையில் வாரிசு சான்றிதழுக்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்தவர் சுதாகர் 46. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திடக்கோட்டை குரூப் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றினார். திடக்கோட்டையைச் சேர்ந்த ராஜா 42, தந்தை இறந்துவிட்டதால் தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு பிப்.,26ல் மனு கொடுத்தார். ரூ.5000 கொடுத்தால் வாரிசு சான்றிதழ் பெற பரிந்துரை செய்வதாக வி.ஏ.ஓ., சுதாகர் கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ராஜா புகாரளித்தார்.
போலீசார் அவரிடம் ரசாயனம் கலந்த ரூபாயை கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம் 12:00 மணிக்கு கோர்ட் எதிரில் உள்ள பேக்கரியில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை தருமாறும் வி.ஏ.ஓ., சுதாகர் கூறினார். அங்கு சென்ற ராஜா பணத்தை சுதாகரிடம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீசார் சுதாகரை கைது செய்தனர். சுதாகர் அவரது தந்தை இறப்பிற்காக கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்.
