மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த ஒப்புதல்: இனி தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்கள்

சென்னை: ‘கஸ்டம்’ தர வரிசையில் இருந்த, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்பதல் வழங்கி உள்ளது. இதனால், விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில், நான்கு சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக, தமிழகம் முன்னேறி உள்ளது.

பயணியர் விமான நிலையங்கள், உள்நாடு, சர்வதேசம், கஸ்டம் என, மூன்றாக வகைப்பபடுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்கள், சர்வதேச விமான நிலையங்களாக இயங்கி வருகின்றன.

மதுரை விமான நிலையம், ‘கஸ்டம்’ எனப்படும் சுங்க வசதி கொண்ட விமான நிலையமாக இயங்கி வந்தது. இங்கிருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே, விமானங்கள் இயக்கப்பட்டன. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர், வெளிநாடுகளுக்கு செல்ல, சென்னை அல்லது திருச்சி விமான நிலையங்களையே பெரிதும் நம்பி இருந்தனர்.

எனவே, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, ஒப்புதல் அளித்தது. இதனால், மதுரையில் இருந்து, புதிய சர்வதேச விமான சேவைகள் கணிசமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டில், விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில், நான்கு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக, தமிழகம் உருவெடுத்துள்ளது. மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டாலும், விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, புதிய சர்வதேச சேவைகளை அதிகரித்தால் மட்டுமே முன்னேற முடியும் என, ஏவியேஷன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: ஒரு விமான நிலையத்தின் தரம் உயர்வு என்பது, விமான நிறுவனங்கள் செலுத்தும் கவனத்தில் மட்டுமே உள்ளன. நம் நாட்டில் விமான நிறுவனங்கள், ‘ஹப் அண்ட் ஸ்போக்’ முறையில், விமான இயக்கங்களை செயல்படுத்துகின்றன. விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களை விட, தனியார் நிர்வகிக்கும் விமான நிலையங்களுக்கே, விமான நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளன.

இதன் காரணமாக, சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டும், பல விமான நிலையங்கள் முன்னேற முடியாமல் இருக்கின்றன. எனவே, சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து கிடைத்தாலும், சேவை திட்டமிடல், புதிய வழித்தட கொள்கை ஆகியவற்றில், மதுரைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் ஆகியோர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு என்ன?

* மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் நிலம் கையகப்படுத்துதலுக்கு, தனி குழு அமைத்து கவனம் செலுத்த வேண்டும்
* மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு, வாரத்துக்கு நான்கு நாள் சேவையை வழங்கி வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திடீரென அதை நிறுத்தி விட்டது. இதற்கு, பயணியரிடம் வரவேற்பில்லை என, காரணம் தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை பயணியர் இரவு நேரத்தில் விமான சேவை வழங்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்
* மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு, ‘பாஷா’ எனும் விமான போக்குவரத்து ஒப்பந்தத்தில், அனுமதிக்கப்பட்ட விமான இருக்கைகள் நிறைய உள்ளன. அவற்றை பயன்படுத்தி, மதுரையில் இருந்து கோலாலம்பூருக்கு விமானங்களை இயக்கலாம்
* மதுரை – அபுதாபி விமான சேவை, தற்போது வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த மார்கத்தில் பயணியர் தேவை அதிகமாக உள்ளது. எனவே விமான நிறுவனங்கள், கூடுதல் விமான சேவை வழங்கலாம்.

நாட்டில் முதல் மாநிலம்

மதுரை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படுவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நான்கு சர்வதேச விமான நிலையம் கொண்ட, முதல் மாநிலமாக தமிழகம் உருவாகி உள்ளது. மற்ற மாநிலங்களில், தனியார் பங்களிப்புடன், சில விமான நிலையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தில் தனியார் பங்களிப்பு இல்லாமல், நான்கு சர்வதேச விமான நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நவி மும்பைக்கு புதிய சேவை

மதுரையில் இருந்து புதிதாக, மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பைக்கும், புனே நகரத்துக்கும், கோடை கால அட்டவணைப்படி, இண்டிகோ நிறுவனம் விமான சேவையை துவக்க உள்ளது. தினசரி இந்த நகரங்களுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளன என, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link