மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, மர்ம நபர்கள் இருவரால் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தன் தோழியரான தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, அவரது தோழியான 16 வயது சிறுமியுடன், நேற்று முன்தினம், சென்னை, மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
பின், இரவு தோழியின் வீட்டில் தங்கி விடுவதாக, 14 வயது சிறுமி, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில், இரு சிறுமியரையும் அழைத்துக் கொண்டு அச்சிறுவன், சொந்த ஊரான மதுராந்தகம் அருகே உள்ள கீழக்காண்டை கிராமம் நோக்கி சென்றுள்ளார்.
மதுராந்தகம் அடுத்த தேவத்துார் பகுதியில் இருந்து, மர்ம நபர்கள் இருவர் சிறுவனின் இருசக்கர வாகனத்தை தொடர்ந்து வந்துள்ளனர்.
இதையறிந்த சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். கீழக்காண்டை அடுத்த அத்திவாக்கம் காட்டுப் பகுதி அருகே செல்லும்போது, சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது.
அப்போது, பின் தொடர்ந்து வந்த இருவரும் சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியை துரத்தி விட்டு, 14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்கு துாக்கி சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, சிலரது உதவியால் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேட்டறிந்த மருத்துவர்கள், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து காவல்துறையிடம் கேட்டறிய முற்பட்டபோது, தகவல் அளிக்க மறுத்தனர்.
