– டில்லி சிறப்பு நிருபர் –
கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் தீவிர பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இத்தகைய மரணங்கள் குறித்து சுதந்திரமான குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். முறையான பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது .
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் தீவிரமான பாதிப்புகளுக்கு, இழப்பீட்டு கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அதாவது, அரசின் மீது தவறு இருப்பதாகக் கருதாமல், மனிதாபிமான அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய இழப்பீட்டு திட்டத்தை உருவாக்குவது, தடுப்பூசி வினியோகத்தில் அரசு தரப்பிலோ அல்லது அதிகாரிகளின் தரப்பிலோ ஏதேனும் தவறு அல்லது குறைபாடு இருப்பதாக ஒப்புக் கொண்டதாகக் கருதப்படாது.
தடுப்பூசிக்கு பிந்தைய பாதிப்புகளை கண்காணிக்கும் தற்போதைய நடைமுறை தொடர வேண்டும். இந்த விவகாரத்தை ஆராய தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதுள்ள அறிவியல் ரீதியான கண்காணிப்பு அமைப்புகளே போது மானது. இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
