சென்னை: 'மின் மாற்றிகள் கொள்முதலில், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுவது, வெறும்

சென்னை: ‘மின் மாற்றிகள் கொள்முதலில், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுவது, வெறும் யூகத்தின் அடிப்படையிலானது; குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

‘தமிழகத்தில், 2021 – 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45,800 மின்மாற்றிகள் கொள்முதலுக்கு, 1,182.88 கோடி ரூபாய் மதிப்புக்கு, ‘டெண்டர்’ கோரப்பட்டது.

397 கோடி ரூபாய்

‘ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடைய செய்ததன் வாயிலாக, அரசுக்கு 397 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘டான்ஜெட்கோ’ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக, முறைகேட்டில் சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர், டெண்டர் வரவேற்பு ஆணையம், டெண்டர் பரிசீலனை குழு ஆகியோர் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதன் விபரம்:

மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்கு புறம்பானவை.

மின்வாரியத்தின் வெளிப்படையான செயல்பாட்டின் மீது, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்த பிரச்னையை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

பல்வேறு கட்டங்களில் மதிப்பீடு செய்த பின்னரே, டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட அதிகாரிகள் யாரும் டெண்டரை இறுதி செய்யவில்லை.

அவகாசம்

டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு, மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுவது, வெறும் யூகத்தின் அடிப்படையிலானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, அரசு தரப்பு பதில் மனுவுக்கு பதிலளிக்க, மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Source link