சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக பா.ஜ.,வில், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில், பா.ஜ., கொள்கை, மத்திய அரசு திட்டங்கள் பற்றி விவாதித்து, நேரத்தை போக்குகின்றனர். அதையெல்லாம் மக்களிடத்தில் போய் பேசினால் மட்டுமே, பா.ஜ., வளர்ச்சிக்கு பயன்படும் என்பது தொண்டர்களின் குமுறலாக உள்ளது.
இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக பா.ஜ.,வில் மத்திய அரசின் திட்டங்கள், தேர்தல் பணிகள் தொடர்பாக, தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாநில நிர்வாகிகள், அணிகள் மற்றும் பிரிவுகளின் பொறுப்பாளர்கள் தான் பங்கேற்கின்றனர்.
ஒருவர் பேசும் விஷயம் மற்ற நிர்வாகிகளுக்கு நன்றாக தெரியும். இந்த கூட்டம், சடங்கிற்கு, இரண்டு – மூன்று மணி நேரம் நடத்தப்படுகிறது. கூட்டம் முழுதும், அரைத்த மாவையே தான் அரைக்கின்றனர். இதனால், கட்சிக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாற்றம் ஏற்பட வேண்டும் எனில், புதிய நபர்களிடம் பேச வேண்டும்.
உதாரணமாக, சைவ உணவு சாப்பிடுபவர்களை அழைத்து, சைவ உணவால் ஏற்படும் நன்மை குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் என்ன பயன்? எனவே, பா.ஜ., கூட்டத்தில் நிர்வாகிகள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை, தங்களுக்குள்ளேயே விவாதித்து கொண்டிருக்காமல், எஸ்.சி., – எஸ்.டி., மக்கள், சிறுபான்மையினர் என, பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து, அவர்களிடம் பா.ஜ.,வின் கொள்கைகளை தெரிவிக்க வேண்டும்.
புதிய இடங்களை தேடிச்சென்று, அங்குள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும். அப்போது தான், தமிழகம் முழுதும் பா.ஜ.,வின் அடித்தளத்தை பலப்படுத்த முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
