சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலம் அது. சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடைப்பட்ட ஊர். ஈசன் மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் உண்டாகும் நோய்களை நீக்குவதற்காகவும் தடுப்பதற்காகவும் தாமே வைத்தியநாதர் ஆக… அம்பிகை, கையில் தைலமும் சஞ்சீவி மூலிகையும் வில்வ மண்ணும் தாங்கி தையல்நாயகியாக உடன் வந்து கோயில்கொண்ட ஊர் என்கின்றன புராணங்கள்.
அதுதான், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அற்புதத் திருக்கோயில் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீவைத்தியநாதர் கோயில்.
முருகப் பெருமான், அசுரனோடு போர்புரிந்தபோது அதில், காயமடைந்த தம் படைவீரர்களின் காயங்களைப் போக்க ஈசனையும் அன்னை பார்வதியையும் எண்ணி வேண்டினார்.
அப்போது அவர்கள் வைத்தியநாதரும் தையல்நாயகியுமாகப் புள்ளிருக்கு வேளூருக்கு எழுந்தருளினர் என்கின்றன திருக்கதைகள்.
தன்வந்திரி சித்தருக்கு உண்டான நோயைத் தீர்க்க, ஈசனும் அம்பிகையும் தைலக்குடத்துடன் வந்து நோய் தீர்த்த தலமிது. அதனால் வைத்யநாதரும் தையல்நாயகி இருவரும் இணைந்து மூலிகைத் தைலத்துடன் நின்று பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.
`புள்’ என்றால் பறவை. `இருக்கு’ எனும் பதம் ரிக்வேதத்தைக் குறிக்கும். `வேள்’ என்பது முருகவேளைக் குறிக்கும். `ஊர்’ எனும் சொல் ஊர்ந்து வரும் சூரியனைக் குறிக்கும் என்பார்கள். ஆக, இந்த நால்வரும் வழிபட்ட தலம் ஆதலால் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு இப்படியொரு பெயர் உண்டு.
அன்னை அருள்மிகு தையல்நாயகி இங்கே வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். சுவாமியோடு தைலப் பாத்திரம் தாங்கி வந்தவள் என்பதால், தைலாம்பாள் என்றும் திருநாமமும் உண்டு. அம்பிகை தாலி பாக்கியத்துக்காக தைலாம்பாளிடம் பிரார்த்தித்துக் கொண்டால் உடனே அருள்வாள் என்கிறார்கள்.
வைத்தியநாதர், வலப்புறத்தில் தையல்நாயகி… இருவருக்கும் இடையில் செல்வமுத்துக்குமார சுவாமி… எனவே இந்தத் தலமே, சோமாஸ்கந்த மூர்த்தத்தின் பாங்கில் அமைந்திருக்கிறது.
தோஷ நிவர்த்திக்காக வரும் பக்தர்கள் இந்த மூவரையும் முறையே வழிபடுவதுடன், செவ்வாய் பகவான் சந்நிதியிலும் அர்ச்சனை ஆராதனை செய்து வணங்கி வேண்டிக்கொள்கிறார்கள்.
அதேபோல் உடற்பிணி நீங்கவேண்டும் எனும் விண்ணப்பத்துடன் வருவோர் ஸ்வாமி, அம்பாள், செல்வமுத்துக்குமரர், தன்வந்திரி, ஜுரஹரேஸ்வரர் ஆகியோரைப் பிரார்த்தித்து வழிபடுகிறார்கள்.

அமுதக் கலசம் ஏந்தி, பாற்கடலிலிருந்து தோன்றிய தன்வந்த்ரி, கையில் கமண்டலமும் கதையும் ஏந்தியபடி, வைத்தியநாத சுவாமி சந்நிதிக்குப் பின்புறம் கோயில் கொண்டுள்ளார். இந்த மண்டபத்துக்கு தன்வந்த்ரி மண்டபம் என்றே பெயர்.
மருத்துவ மேதையான தன்வந்த்ரி, வைத்தீஸ்வரன்கோவிலுக்கு வந்து வைத்தியநாதரை வழிபட்டு, தனது திறமையை வளர்த்துக் கொண்டாராம்.
கோயிலில் பழநியாண்டவர் சந்நிதிக்கு அருகில் ஜுரஹரேஸ்வரர் சந்நிதி கொண்டுள்ளார். இந்தத் தெய்வங்களின் அனுக்கிரகத்தால் உடற்பிணிகளைத் தீர்க்கும் பதியாகவும் திகழ்கிறது இவ்வூர்.
செவ்வாயின் அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் பகவானுக்கு ஒருமுறை உடல் நோய் உண்டானது. அதனால் தேகபொலிவும் பலமும் குன்றியது. உடனே அவர் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள சித்தாமிர்தக் குளத்துக்கு விரைந்து வந்து, நீராடி, வைத்தியநாதரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றாராம்.
இங்கு வந்து அங்காரகனை வழிபடுபவர்களுக்கு எவ்விதக் குறையும் அணுகாது என்று அப்போது சுவாமி வரம் கொடுத்தார். ஆக, இப்போதும் செவ்வாய் பரிகாரத் தலமாக இந்த ஊர் விளங்குகிறது.
அங்காரகன், இங்கே தெற்குப் பார்த்த மூலவர். இவருக்கு அதிபதி முருகன். வைத்தீஸ்வரன்கோவிலில் செல்வமுத்துக்குமாரர் சந்நிதிக்குப் பின்புறம் இவர் சந்நிதி அமைந்திருப்பது வெகு சிறப்பு.

செவ்வாய்க் கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோயில், விழாக் கோலம் பூணும். அன்று, ஆட்டுக்கிடா வாகனத்தில், உற்ஸவர் செவ்வாய் வீதியுலா வருவார். செவ்வாய் தோஷ பாதிப்புகளால் அல்லல் படும் அன்பர்கள், ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்று, வைத்தீஸ்வரர், தையல்நாயகி, செல்வ முத்துக்குமரர் ஆகியோரை வணங்குவதுடன், செவ்வாய் பகவானையும் மனமுருகி வழிபட்டு வாருங்கள்; தோஷ பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
இங்கு மண்ணே மருந்தாகும்; சந்தனமே விருந்தாகும். திருநீறும், திருச்சாம்பலும், சந்தனமும் நோய் தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றன. மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த உப்பை சித்தாமிர்தத்தில் குளத்தில் வைத்து நோய்தீர்க்க வேண்டி படைக்கின்றனர்.
இதனால் பிணிகள் தீருவது இன்றும் நடக்கும் அதிசயம். அதேபோல மலையாக வந்த நோயைத் தீர்த்தால், குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். அதேபோல நோய் தீர்ந்ததும் இங்கு வந்து துன்பத்தைப் போல வெல்லத்தைக் கரைத்தும் செல்கிறார்கள்.
சென்னையிலிருந்து ஈ,சி.ஆர் சாலை வழியாகப் பயணித்தால் 230 கி.மீ. தொலைவில் சிதம்பரம், சீர்காழி தாண்டி வைத்தீஸ்வரன்கோவில் உள்ளது.
