புதுடில்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் தீவிரமாக போரில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்ஷியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் காஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், நேற்று (மார்ச்10) இரவு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்ஷியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் தற்போதைய நிலவரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாகத் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் அவர்கள் உறுதியேற்றனர்.
இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்ஷி உடன் விரிவான உரையாடலை நடத்தினேன். தற்போதைய மோதலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தோம். தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.
கடந்த இரண்டு வாரங்களில் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசுவது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் அவர் அராக்ஷியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.
