டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு கொடுத்ததாக அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் கூறியதற்கு, ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேலுடன் போர் நடத்தி வரும் ஈரான், சர்வதேச அளவில் 20 சதவீதம் எண்ணெய் விநியோகத்தை கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் வளைகுடா கடல்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் காஸ் பற்றாக்குறையை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், இருமடங்கு அதிகமான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஈரானுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த சூழலில், அமெரிக்க கடற்படை ஒரு எண்ணெய் கப்பலை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் கிரிஸ் ரைட் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அமைச்சரின் பதிவு குறித்து ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலிமுகமது நைனி கூறுகையில், ‘அமெரிக்கக் கடற்படையின் எந்தவொரு நகர்வும் எங்கள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் முறியடிக்கப்படும். அமெரிக்க பயங்கரவாத ராணுவத்தின் பாதுகாப்போடு எண்ணெய் கப்பல் சென்றது என்பது முற்றிலும் பொய்,’ என்று அவர் கூறினார்.
அதேவேளையில், வெள்ளை மாளிகை இந்தத் தகவலை மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட், ‘அமெரிக்கா கடற்படையினர் எந்த எண்ணெய் கப்பல்களையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அழைத்துச் செல்லவில்லை,’ என்று கூறினார்.
இதனிடையே, வெள்ளை மாளிகை மற்றும் ஈரான் மறுப்புக்கு மத்தியில், அந்தப் பதிவை எரிசக்தித்துறை அமைச்சர் கிரிஸ் ரைட் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இருந்து நீக்கினார்.
