சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் தாக்குதலின் எதிரொலியாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக ஓட்டல்களில் சமையல் செய்யும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள பெரிய ஸ்டார் ஓட்டல்களில் மின்சார அடுப்புகள் பயன்பாட்டில் உள்ளதால் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்து வருகின்றனர்.
ஆனால் சிறிய நடுத்தர ஓட்டல்களில் முழுக்க முழுக்க வணிக சிலிண்டரை பயன்படுத்தி வருவதால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்களை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இவர்களில் பலர் ஓட்டல்களில் மின்சார அடுப்புகளை வாங்கி பொருத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுபற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ஓட்டல்களில் மின்சார அடுப்புகளை பொருத்தினால் தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்வோம். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி தேவைக்கு மேல் உள்ளது” என்று தெரிவித்தார்.
