துபாய்: ஐ.சி.சி., ‘டி-20’ போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் இஷான் கிஷான், 2வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 875 புள்ளிகளுடன் ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர், சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பையில் 8 போட்டியில், 2 அரைசதம் உட்பட 141 ரன் எடுத்தார்.
இத்தொடரில் 317 ரன் குவித்த இந்திய வீரர் இஷான் கிஷான், 871 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து முதல் முறையாக 2வது இடத்துக்கு முன்னேறினார். ‘டி-20’ உலக கோப்பையில் தொடர் நாயகன் (321 ரன்) விருது வென்ற இந்தியாவின் சஞ்சு சாம்சன் (637 புள்ளி), 40வது இடத்தில் இருந்து 22வது இடத்தை கைப்பற்றினார்.
பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (740), முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ‘டி-20’ உலக கோப்பையில் 14 விக்கெட் சாய்த்த இவர், ரன்களை (287 ரன், சராசரி 20.50, ‘எகானமி’ 9.25) வாரி வழங்கினார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (753) ‘நம்பர்-1’ இடம் பிடித்தார்.
‘டி-20’ உலக கோப்பையில் 14 விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (702), 7வது இடத்தில் இருந்து ‘நம்பர்-6’ இடத்தை தட்டிச் சென்றார்.
‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (328 புள்ளி), இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (299) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.
