மும்பை: இந்திய வீரர் ஷிவம் துபே, ரயிலில் மாறு வேடத்தில் பயணம் செய்து மும்பை சென்றுள்ளார்.
ஐ.சி.சி., ‘டி-20’ உலக கோப்பை தொடர் பைனல் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இந்திய அணி, 96 ரன்னில் நியூசிலாந்தை வீழ்த்தியது. சொந்தமண்ணில் முதல் ‘டி-20’ உலக கோப்பை, தொடர்ந்து 2வது முறை, தவிர 3வது முறை ‘டி-20’ உலக கோப்பை வென்ற முதல் அணி என சாதனை படைத்தது இந்தியா.
மறுநாள் இந்திய வீரர்கள் வீடு திரும்ப, வழக்கமாக தனி விமானம் ஏற்பாடு செய்யப்படும். அல்லது மொத்தமாக விமானத்தில் செல்வர். இம்முறை விமானத்தில் டிக்கெட் கிடைக்காத நிலையில், தனித்தனியாக திரும்பினர். பைனலில் ரன் மழை பொழிந்த ‘ஆல் ரவுண்டர்’ ஷிவம் துபே (8 பந்து, 26 ரன்), தனது மனைவி, நண்பருடன், மும்பைக்கு ரயிலில் செல்ல முடிவெடுத்தார்.
3ம் வகுப்பு ஏ.சி., பெட்டியில் பயணம் செய்தார். யாரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக தலையில் தொப்பி, முகத்தில் ‘மாஸ்க்’, ‘டி-சர்ட்’ அணிந்து கொண்டார் துபே 32. ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பு வரை, காரில் காத்திருந்தார். அதிகாலை 5:10 மணிக்கு ரயிலில் கிளம்பினார்.
யாருக்கும் தெரியக் கூடாது என, ரயிலில் ‘அப்பர் பெர்த்தில்’ ஏறி படுத்துக் கொண்டார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் வந்து, ‘ஷிவம் துபே… கிரிக்கெட் வீரரா?,’ என கேட்க, பர பரப்பான சூழல் ஏற்பட்டது. உடனே தலையிட்ட அவரது மனைவி அஞ்சும் கான் தலையிட்டு, ‘அவர் எப்படி, இங்க வருவார்,’ என கூறி சமாளித்தார். எனினும், ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் சமாளிக்க, போலீஸ் அதிகாரி ஒருவரும் உடன் பயணித்தார்.
ஷிவம் துபே கூறுகையில், ”விமானத்தில் டிக்கெட் இல்லாததால், ஆமதாபாத்தில் இருந்து மும்பைக்கு ரயிலில் செல்ல முடிவு செய்தேன். யாராவது அடையாளம் கண்டு கொண்டால் என்ன செய்வது என பலரும் கேட்டனர். நல்ல வேளையாக யாருக்கும் தெரியவில்லை. பயணம் இனிமையாக இருந்தது,” என்றார்.
