தஞ்சாவூர்: திருவிடைமருதுார் அருகே மதமாற்றம் செய்த நபர்களை தடுத்து, அதை ‘வீடியோ’வாக வெளியிட்ட, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார், திருநறையூர் வள்ளுவர் தெருவில், நேற்று (மார்ச் 10) ஒன்பது பேர் கொண்ட கும்பல், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, கிறிஸ்துவ மத பிரசாரம் செய்து புத்தகங்களை வழங்கி, சர்ச்சுக்கு வரவழைத்து, மத பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர்.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அறிந்த திருநறையூரை சேர்ந்த ஆதித்யன், 30, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மக்கள் தொடர்பாளர். மதமாற்றும் செய்த நபர்களை தடுத்து நிறுத்தி, சரமாரியாக கேள்வி கேட்டு வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், ஆதித்யனை போலீசார், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆதித்யன், மத உணர்வோடு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக, திருநறையூர் வி.ஏ.ஓ., ஜோதிநாயகம் மூலம் புகார் பெற்று, ஆதித்யனை போலீசார் கைது செய்தனர்.
தகவலறிந்த திருநறையூர் மக்கள், ஹிந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.,வினர், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., அலுவலகம் முன் குவிந்தனர். இருப்பினும் இரவு, கும்பகோணம் நீதிமன்றத்தில், ஆதித்யனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
