துாத்துக்குடி : விளாத்திக்குளம் அருகே, பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேடநத்தத்தை சேர்ந்தவர் பிளஸ் 2 மாணவி. தற்போது பொதுத் தேர்வு நடந்து வருவதால், நேற்று இரவு, வீட்டில் தனியாக அமர்ந்து வெகு நேரம் படித்துள்ளார். பின், இயற்கை உபாதைக்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் உதவியோடு அப்பகுதியில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
இதற்கிடையே, வேடநத்தம் காட்டுப்பகுதியில், மாணவி உடைகள் களைந்த நிலையில், உடலில் சிராய்ப்பு காயங்களுடன் சடலமாக கிடப்பது தெரிந்தது. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி., மதன் தலைமையிலான போலீசார், பேச்சு நடத்தி கலைத்தனர். விசாரித்த குளத்துார் போலீசார், ‘பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற விபரம் தெரியவரும்’ என்றனர்.
பெற்றோரை போலீசார் அலைக்கழித்ததாக புகார்..
மாணவி நேற்று இரவு மாயமான நிலையில், அவரது பெற்றோர் இன்று காலை குளத்துார் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளனர். புகாரை வாங்க மறுத்த போலீசார், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்ததிற்கு செல்லுங்கள் என அலைக்கழித்துள்ளனர். மாயமான மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். போலீசார் அலைக்கழித்த நிலையில், உறவினர்கள் காட்டுப் பகுதியில் தேடியபோது அங்கு மாணவி கொடூரமான கொலை செய்யப்பட்டு கிடப்பது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே காட்டுப் பகுதிக்கு திரும்பி உள்ளனர். கொலை செய்யப்பட்டிருந்த மாணவியின் உடலில் வலது தோல்பட்டை பகுதியில் சிராய்ப்பு காயங்கள் இருந்துள்ளது. அவரது ஆடைகள் களையப்பட்டிருந்தன. மர்மநபர்கள் அவரை காட்டுப் பகுதிக்குள் துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்து உடலை வீசி சென்றிருக்கலாம் என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
