'டிஜிட்டல் கைது' மோசடி; ரூ.1.50 கோடி இழந்த முதியவர் பரிதவிப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில், ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி, 64 வயது முதியவரிடம் இருந்து, 1.56 கோடி ரூபாய் பணத்தை சைபர் மோசடி கும்பல் பறித்துள்ளது.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம், பத்லாபூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 64 வயது முதியவர். இவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி மொபைல் போனில் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் முதியவரிடம், ‘பெண்களுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியதாக உங்கள் மீது புகார் உள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ளோம்.

வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம் என மிரட்டியுள்ளனர்.

கடந்த 7ம் தேதி வரை அவரை தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில் வைத்தசைபர் மோசடி கும்பல், ‘வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டும், அதுவரை கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கிக்கு மாற்றுங்கள்’ எனக் கூறி, அவரது கணக்கில் இருந்த 1.56 கோடி ரூபாயை தங்கள் கணக்குகளுக்கு மாற்றிக்கொண்டனர்.

பணம் திரும்ப வராததால், மோசடிக்கு உள்ளானதை உணர்ந்த முதியவர், போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link