புதுடில்லி: நாட்டில் சில துறைகளில் நிலவி வரும் எரிசக்தி தட்டுப்பாட்டை போக்க, மத்திய அரசு விரிவான உத்திகளை வகுத்துள்ளது. நாடு முழுதும் தற்போது நிலக்கரி இருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகளவில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, நிலக்கரி அமைச்சகத்திற்கு முக்கிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலால் கடுப்பான ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இந்த வழியாகத் தான், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கிறது. இதனால், நம் நாடு உட்பட உலகம் முழுதும் சமையல் காஸ் சிலிண்டர், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் சில துறைகளில் நிலவி வரும் எரிசக்தி தட்டுப்பாட்டை போக்க, மத்திய அரசு விரிவான உத்திகளை வகுத்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு முக்கிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
21 கோடி டன்
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுதும் தற்போது, 21 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. இது, சுதந்திரத்துக்கு பின் பதிவாகும் அதிகபட்ச அளவு. இந்த கையிருப்பு, வினியோகத் தொடரின் பல்வேறு நிலைகளில் பிரித்து வைக்கப்பட்டு உள்ளது.
அதாவது, பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களுக்கு, 12.7 கோடி; தனியார் மற்றும் வணிக ரீதியிலான சுரங்கங்களுக்கு 1.5 கோடி; மின் உற்பத்தி நிலையங்களுக்கு 5.4 கோடி; போக்குவரத்து துறைக்கு, 1.4 கோடி டன் என, பிரித்து வைக்கப் பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, நிலக்கரி அமைச்சகத்திற்கு முக்கிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மாணவர் விடுதிகளில் சமையல் தேவைகளுக்காக நிலக்கரி வழங்க, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அறிவுறுத்தல்
மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு நிலக்கரி வினியோகிக்கவும் நிலக்கரி அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மற்ற தொழில் துறைகளுக்கு கூடுதல் எரிசக்தி தேவைப்பட்டால், பெட்ரோலிய அமைச்சகத்துடன் இணைந்து தடையற்ற எரிசக்தி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தொழில் துறைகளுக்கு நிலக்கரி வழங்குவதில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி, தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் தடுப்பதற்கும், எரிசக்தி வினியோகத்தை நிலைப்படுத்துவதற்கும் அரசு மேற்கொண்டு வரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
