கோவை தெற்கில் மீண்டும் பா.ஜ., போட்டியிட ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தல்

சென்னை: ‘சட்டசபை தேர்தலில், பா.ஜ., மீண்டும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என, ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக, கோவையில் பா.ஜ.,வுக்கு குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி உள்ளது. அதிலும் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில், சிறுபான்மை சமூகத்தினர், 30 முதல் 40 சதவீதம் வரை உள்ளனர். இருந்தபோதும், அங்கு பா.ஜ., வலிமையாக உள்ளது.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட வானதி, 33,113 ஓட்டுகள், அதாவது 21.57 சதவீதம் பெற்றார். அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ., கன்னியாகுமரிக்கு வெளியே, ‘டிபாசிட்’ பெற்றது, கோவை தெற்கில் மட்டும்தான்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணி ஏற்பட்டபோது, 2016ல் அங்கு வென்ற அம்மன் அர்ச்சுனனுக்காக, அத்தொகுதியை பா.ஜ.,வுக்கு தர அ.தி.மு.க., மறுத்தது. ஆனாலும், போராடி பெற்றது பா.ஜ.,

தனி கட்சி துவங்கிய கமலும் போட்டியிட்டாலும், தி.மு.க., – ம.நீ.ம., – அ.தி.மு.க., என்ற மும்முனை போட்டியில் பா.ஜ., வென்றது.

இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதிக்குப் பதிலாக, கோவை வடக்கு தொகுதியில் வானதி போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.

கோவை தெற்கை கைவிட்டு, கோவை வடக்கில் பா.ஜ., போட்டியிட, ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி போன்ற ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.


ஹிந்து அமைப்பினர் கூறியதாவது: கோவை தெற்கு என்பது ஹிந்து அமைப்புகளின் தியாக பூமி. அங்கு, எண்ணற்ற போராட்டங்கள் நடந்துள்ளன. கொங்கு மண்டலத்தில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.,வின் எழுச்சி இங்கிருந்துதான் துவங்கியது.

எனவே, கோவை தெற்கில் மீண்டும் பா.ஜ.,வே போட்டியிட வேண்டும். இதை பா.ஜ., தலைமை உணர வேண்டும். அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link